செய்யூர் இருளர் பகுதிக்கு சாலை வசதி இல்லாமல் அவதி
செய்யூர்:செய்யூர் ஊராட்சியில் சால்ட் ரோடு பகுதியில் கடந்த 2006 ம் ஆண்டு 32 இருளர் குடும்பங்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வீடு கட்டி குடி அமர்த்தப்பட்டனர்.பிரதான சாலையில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு செல்ல 19 ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை, இதனால் முதியவர்கள்,குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.தனியாருக்கு சொந்தமான நிலத்தை பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். மழைகாலங்களில் தனியார் நிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செல்ல வழியின்றி இருளர் பகுதி தனி தீவு போல மாறிவிடுகிறது.பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் சாலை வசதி ஏற்படுத்தி தர மனு அளித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.கடந்த 2023ம் ஆண்டு இருளர் பகுதிக்கு அருகே உள்ள ஆதிதிராவிட நலத்துறைக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்தி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான அனுமதி பெற திட்டவரைபடம் தயார் செய்யப்பட்டு, விரைவில் சாலை அமைக்கும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால் தற்போது வரை சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை, மேலும் கடந்த பருவமழையின் போது குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் தேங்கியதால், சிமென்ட் சாலையை உடைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தற்போது வரை சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் இருளர் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.