ரயில்வே காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை செங்கையில் பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறி
மறைமலை நகர்,:செங்கல்பட்டு ரயில்வே காவல் நிலையத்தில் போதிய போலீசார் இல்லாததால், பயணியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான ரயில் பாதை மற்றும் செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் பாதைகளுடன் இணைந்து முக்கிய ரயில் நிலைய சந்திப்பாக, செங்கல்பட்டு ரயில் நிலையம் உள்ளது.இங்கிருந்து 60 புறநகர் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகின்றன.செங்கல்பட்டிலிருந்து லட்சக்கணக்கானோர் தாம்பரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கின்றனர்.ரயில் விபத்து, திருட்டு மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு தீர்வு காண, 1955ம் ஆண்டு செங்கல்பட்டு ரயில் நிலைய வளாகத்தில், ரயில்வே காவல் நிலையம் துவக்கப்பட்டது.இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம், திண்டிவனம், முண்டியம்பாக்கம், பாலுார், வாலாஜாபாத், காஞ்சிபுரம், தக்கோலம் உட்பட பல்வேறு ரயில் நிலையங்கள் உள்ளன.இதன் எல்லை, 160 கி.மீ., பரப்பளவில் உள்ளது.இந்த பகுதிகளில், ரயிலில் அடிபட்டு இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்புவது, திருட்டு, சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு போன்றவற்றை, ரயில்வே போலீசார் கவனித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, விபத்து, திருட்டு வழக்குகள் ஆகியவற்றுக்கும், காஞ்சிபுரம், தக்கோலம் ஆகிய இடங்களில் பிரச்னை ஏற்பட்டாலும், செங்கல்பட்டில் இருந்து ரயில்வே போலீசார் செல்ல வேண்டி உள்ளது.ஆனால், தற்போது காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை உள்ளதால், அனைத்து பணிகளிலும் தொய்வு ஏற்பட்டு உள்ளது.இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என, 35 பேர் பணிபுரிய வேண்டிய இந்த காவல் நிலையத்தில், 12 பேர் மட்டுமே உள்ளதால், ரயில்வே போலீசார் கடும் மன அழுத்தத்திலும், பணிச்சுமையிலும் வேலை பார்த்து வருகின்றனர்.இது குறித்து, ரயில் பயணியர் கூறியதாவது:புறநகர் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் இரண்டு போலீசார் கூட பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது இல்லை. ஏதாவது புகார் அல்லது சம்பவங்கள் நடைபெறும் நாட்களில் மட்டும் பணியில் உள்ளனர்.இதன் காரணமாக, பயணியர் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. ரயில் நிலைய பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் குறி வைத்து திருடப்பட்டு வருகின்றன.புறநகர் மின்சார ரயில்களில் கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, வண்டலுார் ரயில் நிலையங்களில், இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இவற்றை தடுக்க, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.இது குறித்து, ரயில்வே போலீசார் கூறியதாவது:வளர்ந்து வரும் நகரமான செங்கல்பட்டு பகுதியின் ரயில்வே காவல் நிலையத்தின் எல்லை அதிகமாகவும், போலீசார் பற்றாக்குறையாகவும் உள்ளனர்.இதனால், ஏதாவது பிரச்னை ஏற்படும் போது, உள்ளூர் காவல் நிலையத்தை நாட வேண்டி உள்ளது. எனவே காஞ்சிபுரம், திண்டிவனம் பகுதிகளில் புதிதாக ரயில்வே காவல் நிலையம் அமைக்க, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்துரு அனுப்பி வைத்து காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தாம்பரத்திலும் போலீசார் பற்றாக்குறை
தாம்பரம் ரயில்வே காவல் நிலைய எல்லையில், திரிசூலம் ரயில் நிலையம் முதல் சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் வரை, 35 கி.மீ., துாரம், புறநகரின் முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன. 45 ரயில்வே போலீசார் பணிபுரிய வேண்டிய இந்த காவல் நிலையத்தில், தற்போது 21 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.