சிட்கோ சிற்பக்கலை பூங்கா மாமல்லபுரத்தில் துவக்கம்
மாமல்லபுரம்:மாமல்லபுரம் பகுதி சிற்பக்கலை தொழிலுக்கான,'சிட்கோ' சிற்பக்கலை பூங்காவை, முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக துவக்கினார். பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தில் உள்ள பாறை குன்றுகளில், வெவ்வேறு வகை சிற்பக் கலைகளை படைத்தனர். அன்றைய கற்சிற்ப கலை, தற்காலத்திலும் இப்பகுதியில் சிறந்து விளங்குகிறது. மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், ஏராளமான சிற்பக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. கற்சிற்பம் வடிக்கும் தொழிலில், 3,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கைவினைத்தொழில் மேம்பாட்டிற்காக, சிற்பக்கூடங்களை ஓரிடத்தில் ஒருங்கிணைத்து வரைமுறைப்படுத்த, தமிழக அரசு முடிவெடுத்தது. இதையடுத்து சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையின் கீழ் இயங்கும்,'சிட்கோ' நிறுவனம் சார்பில், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில், 23 கோடி ரூபாய் மதிப்பில், 'சிட்கோ' சிற்பக்கலை பூங்கா அமைப்பதாக, தமிழக அரசு 2021ல், சட்டசபையில் அறிவித்தது. இத்திட்டத்திற்காக கடம்பாடி பகுதியில், புதுச்சேரி சாலையை ஒட்டி, 21 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் கடந்தும், இப்பூங்கா துவக்கப்படவில்லை. சிற்பத் தொழிலின் சிறப்பு, முக்கியத்துவம் ஆகியவை கருதி, சிற்பக்கூடங்களுக்கு இலவச இடம் அளிக்கப்படும் என்றே உரிமையாளர்கள் எதிர்பார்த்து, திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால்,'சிட்கோ' நிறுவனமோ, ஒவ்வொருவருக்கும் தேவையான இடத்தை, அதற்கேற்ற தொகைக்குஅளிப்பதாக துவக்கத்தில் தெரிவித்து, பின்னர் அதற்கும் மறுத்து, வாடகைக்கு அளிப்பதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சர்ச்சையால், திட்டம் கிடப்பில் இருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தியும் வெளியிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, மீண்டும் இதுகுறித்து ஆலோசிக்கப்படவில்லை என, சிற்பக்கூட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இச்சூழலில், பூங்கா பகுதியில் நுழைவாயில், தார்ச்சாலை என, தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா, 4.44 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் நேற்று, வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார். இதன் துவக்க விழாவில் கலெக்டர் சினேகா, சிட்கோ அதிகாரிகள் பங்கேற்றனர். ஒரு மாதத்தில்,'ஆன்லைன்' விண்ணப்ப முறையில் சிற்பக் கூடங்களுக்கு பதிவு துவக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.