பவுஞ்சூர் பஜாரில் நுாலகம் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
பவுஞ்சூர்:பவுஞ்சூர் பஜார் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண் விரிவாக்க மையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பஜார் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.திருவாதுார், பச்சம்பாக்கம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வெளியூர்களுக்குச் செல்ல பவுஞ்சூர் பஜார் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்துகின்றனர்.அதனால், தினசரி ஏராளமான பொதுமக்கள் பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.இப்பகுதியில் நுாலக வசதி இல்லாததால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பட்டதாரிகள், முதியவர்கள் மற்றும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும், பொது அறிவு, கல்வி சார்ந்த சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியாமல் சிரமப்படுகின்றனர்.துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பவுஞ்சூர் பஜார் பகுதியில் நுாலக வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.