தசரா விழா விளையாட்டு சாதனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் தசரா விழா, வரும் 23ம் தேதி துவங்கி, அக்., 2ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக, தசரா விழா விளையாட்டு சாதனங் களை அதிகாரிகள்ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டில், நவராத்திரியை ஒட்டி, 10 நாட்கள் தசரா விழா நடைபெறும். கடந்த 129 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆண்டுதோறும் இவ்விழா நடத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு நகரில் தசரா விழாவையொட்டி சின்னக்கடை, பூக்கடை, சின்னம்மன்கோவில், சின்னநத்தம், ஓசூரம்மன் கோவில், முத்துமாரிஅம்மன் கோவில், மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில், அம்மன் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படும். விழாவிற்கும் வரும் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்வர். அதன்படி இந்தாண்டு தசரா விழா, வரும் 23ம் தேதி துவங்கி, அக்., 2ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி, அனுமந்தபுத்தேரி பகுதியில் சிறிய, பெரிய ராட்டினம், பொழுதுபோக்கு விளையாட்டு மற்றும் வீட்டு உபயோக பொருள் விற்பனை கடைகள், உணவு கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விழா நடைபெறும் பகுதியில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் குடிநீர், தற்காலிக கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தசரா விழாவிற்காக அமைக்கப்படும் ராட்டினங்கள், பொழுது போக்கு விளையாட்டு அமைப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளனர். தசரா விழா நடைபெற உள்ள சாலையில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, மழைநீர் தேங்கி நிற்கிறது. இச்சாலையில், ஆயிரக்கணக்கான மக்கள் குவிய உள்ளதால், சாலைகளை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டணம் அதிகம்
தசரா விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் ஏராளமானோர் வருவர். இங்கு பெண்களுக்கு தற்காலிக கழிப்பறைகள் குறைவாக வைப்பதால், பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே, கூடுதல் கழிப்பறைகள் அமைக்க வேண்டும். குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும். விளையாட்டு சாதனங்களில் குழந்தைகள், பெரியவர்கள் விளையாடுவதற்கான கட்டணம் அதிகமாக உள்ளது. இதற்கான கட்டணத்தை, மாவட்ட நிர்வாகமே நிர்ணயிக்க வேண்டும். விழா நாட்களில் தினமும், இப்பகுதியில் துாய்மை பணி மேற்கொள்ள வேண்டும். - எஸ்.ஆர்.எஸ்.தணிகாசலம், செங்கல்பட்டு.