உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லபுரத்திலிருந்து சிறப்பு பஸ் பொங்கலுக்கு இயக்க எதிர்பார்ப்பு

மாமல்லபுரத்திலிருந்து சிறப்பு பஸ் பொங்கலுக்கு இயக்க எதிர்பார்ப்பு

மாமல்லபுரம், சுற்றுலா பகுதி மாமல்லபுரம், அணுசக்தி துறை கல்பாக்கம் ஆகிய பகுதிகளில், பல மாவட்ட பகுதியினர் வசிக்கின்றனர்.பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை இவர்களின் பெரும்பாலானோர், தங்களின் சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுகின்றனர்.அதற்காக ரயில், அரசு விரைவு பேருந்து ஆகியவற்றில் முன்பதிவு செய்து, செங்கல்பட்டு சென்று அங்கிருந்து பயணிக்கின்றனர். முன்பதிவு செய்யாதவர்கள், அரசு பேருந்தையே நம்பியுள்ளனர்.சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்பவர்கள், சென்னை - புதுச்சேரி இயங்கும் அரசு பேருந்தில் புதுச்சேரி சென்று, அடுத்தடுத்த ஊராக மாறிச் செல்வர். பொங்கல் பண்டிகைக்காக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவை, சென்னையில் புறப்படும் போதே கூட்ட நெரிசலுடன் உள்ள நிலையில், மாமல்லபுரம், கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் நிற்பதில்லை.இதனால், இப்பகுதிகளில் பயணியர் நீண்டநேரம் காத்திருந்தும், பேருந்தில் செல்ல இயலவில்லை. வெகுநேரத்திற்குப் பின், ஏதேனும் ஒரு பேருந்து நின்றால், அதில் முண்டியடித்து ஏறி, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நின்றுகொண்டே பயணம் செய்து அவதிக்குள்ளாகின்றனர்.முதியோர், பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இப்பகுதிக்கு மீண்டும் திரும்பும் போதும் பரிதவிக்கின்றனர். பண்டிகை காலத்தில், இப்பகுதி பயணியர் நலன் கருதி, மாமல்லபுரம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளை ஒருங்கிணைத்து, கல்பாக்கம் பணிமனை நிர்வாகம், சிறப்பு பேருந்து இயக்கலாம். எனவே, அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை