உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செங்கல்பட்டில் வரும் 15ல் துவக்கம்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செங்கல்பட்டில் வரும் 15ல் துவக்கம்

செங்கல்பட்டு, அரசின் சேவைகள், திட்டங்களை மக்களுக்கு நேரடியாக வழங்கும்,'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம், வரும் 15ம் தேதி துவக்கப்படுகிறது.இதுகுறித்து, கலெக்டர் சினேகா அறிக்கை:கடந்த சட்டசபை கூட்டத்தில், 'மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நகர்ப்புற பகுதியில் 106 முகாம்கள், ஊரக பகுதிகளில் 243 முகாம்கள் என, மொத்தம் 349 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.முதற்கட்டமாக வரும் 15ம் தேதி துவங்கி, ஆக., 14ம் தேதி வரை, நகர்ப்புற பகுதிகளில் 52 முகாம்கள், ஊரக பகுதிகளில் 69 முகாம்கள் என, மொத்தம் 121 முகாம்கள் நடக்க உள்ளன.இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில், 13 அரசு துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். முகாமிற்கு வரும் பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, மருத்துவ சேவைகள் வழங்க, மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விபரங்கள், அங்கு வழங்கப்பட உள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரிப்பர்.அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதுடன், தகவல் கையேட்டையும், விண்ணப்பத்தையும் வழங்குவர்.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட மகளிர் இருப்பின், முகாமில் மனுக்கள் அளிக்கலாம்.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் முகாமில் வழங்கப்படும்.இம்முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, 45 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை