தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டும், மலைபோல் குப்பை குவிந்திருப்பதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குப்பை சேகரிக்கும் உரம் தயாரிப்பு மையங்கள் முழுதாக முடங்கியுள்ளதால். இப்பிரச்னை தீவிரமடைந்துள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் ஐந்து மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும், தனித்தனி ஒப்பந்ததாரர்கள் வாயிலாக குப்பை சேகரிப்பு பணி நடந்து வந்தது.பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் குப்பை சேகரிப்பு பணிகள் நடக்காததால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.இதையடுத்து, ஐந்து மண்டலங்களிலும் குப்பை சேகரிக்கும் பணி, 'அவர்லேண்ட்' என்ற தனியார் நிறுவனத்திடம், 2023, மார்ச் மாதம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிறுவன ஊழியர்கள், வீடு மற்றும் தெருக்கள் தோறும் குப்பை சேகரித்து மாநகராட்சியில் உள்ள 26 உரம் தயாரிப்பு மையங்களில் கொட்டி வருகின்றனர்.அவ்வாறு கொட்டப் படும் குப்பை கழிவுகளை, மாநகராட்சி நிர்வாகம் முறையாக கையாளாததால், உர தயாரிப்பு மையங்கள், குப்பை மலையாக உருவெடுத்து வருகின்றன. குப்பை சேகரித்தாலும் கொட்ட இடமில்லாத சூழலால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மேற்கு தாம்பரம் அடுத்த கன்னடப்பாளையம், பம்மல் விஸ்வேசபுரம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும், எப்போதும் இல்லாத அளவிற்கு டன் கணக்கில் குப்பை குவிக்கப்பட்டுள்ளது.'தாம்பரம் மாநகராட்சியில், உரம் தயாரிக்கும் மையங்கள், மறு சுழற்சி செய்ய முடியாத பொருட்கள் தேக்கி வைப்பதாலே, குப்பை பிரச்னையை தீர்க்க முடியாததாக நீடிக்கிறது' என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:குப்பை பிரச்னையை தீர்க்க, 35 உரம் தயாரிக்கும் மையங்கள், 51 சிறிய உரம் தயாரிக்கும் குடில்கள் அமைக்கப்பட்டு, 2023 ஏப்ரலில் செயல்பாட்டிற்கு வரும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது. அதேபோல், உணவு மற்றும் இறைச்சி கழிவுகளில் இருந்து காஸ் உற்பத்தி மையம், மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களை தேக்கி வைக்கும் மையங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதுவரை, 20 உரம் தயாரிக்கும் மையங்கள், பொருட்களை தேங்கி வைக்கும் ஒரு மையம் ஆகியவை மட்டுமே செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவையும், முறையாக செயல்படாமல் உள்ளன. இங்குள்ள இயந்திரங்கள், கன்வேயர் பெல்ட் உள்ளிட்டவை பழுதாகி உள்ளன. இயந்திர பாகங்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால், பழுதை சீரமைக்க முடியவில்லை. தவிர, உரம் தயாரிப்பு மையங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இங்கு கொண்டு வந்து கொட்டப்படும் குப்பையில் இருந்து மட்கும், மட்காத கழிவுகளை தரம் பிரிக்க வேண்டும். இதற்கான தொட்டிகளில் மட்கும் குப்பை தொட்டி, மண் புழுக்களை விட்டு உரம் தயாரிக்க வேண்டும்.இப்பணிகளை தொடர்ச்சியாக செய்ய பணியாளர்கள் இல்லாததால், மாநகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பையை முறையாக கையாள முடியாமல், கன்னடப்பாளையம், விஸ்வேசபுரம், மாடம்பாக்கம் ஆகிய இடங்களில் மலைப்போல் தேக்கப்படுகிறது.இப்படியே போனால், தாம்பரம் மாநகராட்சியில் குப்பை பிரச்னை பெரும் விஸ்வரூபம் எடுத்து, தலைவலியாக மாறிவிடும். மாநகராட்சி உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.40 நாட்களில் முடியும்தாம்பரம் மாநகராட்சியின் 30 உரம் தயாரிக்கும் மையங்களில் இயந்திரங்கள், கன்வேயர் பழுதாகி உள்ளன. இயந்திரங்களுக்கான பாகங்கள் கிடைக்காததால், முடிந்த அளவுக்கு சரி செய்து இயக்கி வந்தோம். இந்த, 30 மையங்களிலும் புதிய இயந்திரங்கள் பொருத்த நகராட்சி நிர்வாக இயக்குனரகம், நிர்வாக ஒப்புதல் வழங்கி உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அதற்கான 'டெண்டர்' கோரப்பட்டு பணிகள் துவங்கப்படும். அதேபோல், மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களை தேக்கி வைக்கவும் ஒரு இடம் ஏற்படுத்தப்படும். கன்னடபாளையம், விஸ்வேசபுரம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 'மிக்ஜாம்' புயலின் போது சேகரிக்கப்பட்ட குப்பையை கொட்டியதால், அங்கு தேங்கி உள்ளது. குப்பையை அகற்றும் பணியும் நடந்து வருகிறது. 40 நாட்களில் இப்பணி முடியும்.அருளானந்தம்நகர் நல அலுவலர், தாம்பரம் மாநகராட்சி.