பெருமாட்டுநல்லுாரில் ரூ.32 கோடியில் துணை மின் நிலையம் பரிந்துரை! : கூடுவாஞ்சேரி நகராட்சி, 30 கிராமத்தின் மின் பிரச்னைக்கு தீர்வு
செங்கல்பட்டு:கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் அதை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் நிலவும் மின் பிரச்னைக்கு தீர்வு காண, பெருமாட்டுநல்லுாரில் துணை மின் நிலையம் அமைக்க, 32 கோடி ரூபாய் நிதி கேட்டு, மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு, கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. வரும் மே மாதத்திற்குள் பணிகளை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, 1950ம் ஆண்டு, அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப, 33 கே.வி., திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.இந்த நகராட்சி, சென்னைக்கு அருகில் இருப்பதால் மக்கள் குடியேற்றம் அதிகரித்து, வீடுகளும் அதிகரித்து வருகின்றன. இந்நகரில், 15க்கும் மேற்பட்ட திருமண மண்டங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் உள்ளன.கூடுவாஞ்சேரியில் கிழக்கு, மேற்கு, நகரம் என, மூன்று மின்வாரிய அலுவலகங்களிலிருந்து வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், தனியார் தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு தேவைகளுக்கு, 50,000க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.இவர்களுக்கு, கூடுவாஞ்சேரியில் உள்ள இரண்டு துணை மின் நிலையங்களில் இருந்து, மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதேபோன்று கூடுவாஞ்சேரி நகராட்சியை ஒட்டியுள்ள தனி ஊராட்சிகளான காயரம்பேடு, பெருமாட்டுநல்லுார், கல்வாய் உள்ளிட்ட ஊராட்சிகளில், 50,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இங்குள்ள ஊராட்சிகளிலும் மக்கள் குடியேறுவது அதிகரித்து, வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.தற்போது, கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் அதை ஒட்டிய தனி ஊராட்சிகளில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள், சமூக விரோத செயல்கள் நடந்து வருகின்றன.இதனால், சீரான மின் வினியோகம் வழங்கக்கோரி, நகரவாசிகள் மற்றும் கிராமவாசிகள் தொடர் போராட்டங்கள் நடத்தினர்.அதன் பின் நகராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்க கோரி கலெக்டர், மின்சாரத் துறை அமைச்சர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.இம்மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமை பொறியாளருக்கு, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் பரிந்துரை செய்தார். இதையடுத்து, பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில், மின் வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் துணை மின் நிலையம் அமைக்க, 32 கோடி ரூபாய் நிதி கேட்டு, மின்வாரிய தலைமை பொறியாளருக்கு, செங்கல்பட்டு மின்வாரிய அதிகாரிகள் கருத்துரு அனுப்பி உள்ளனர். அத்துடன், துணை மின் நிலையம் அமைக்கும் பணியை விரைந்து துவக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.* துணை மின் நிலையம்பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில், 110 கிலோ வோல்ட் திறனுடைய துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதனால், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் காயரம்பேடு, பெருமாட்டுநல்லுார், கல்வாய், ஊரப்பாக்கம், காரணைபுதுச்சேரி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன் பெறும்.நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் அதை ஒட்டியுள்ள தனி ஊராட்சிகளுக்கு, துணை மின் நிலையம் அமைத்து, சீரான மின் வினியோகம் செய்ய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர், கலெக்டர், மின்வாரிய அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோடைக் காலத்திற்குள் பெருமாட்டுநல்லுாரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.- எம்.கே.டி.கார்த்திக்நகராட்சி தலைவர்,நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி.பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில், 110 கிலோ வோல்ட் திறனுடைய துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அங்கு, தலா 16 எம்.வி.ஏ., எனப்படும் 'மெகா வோல்ட் ஆம்பியர்' திறனில், இரண்டு 'டிரான்ஸ்பார்மர்கள்' அமைக்க, 32 கோடி ரூபாய் நிதி கேட்டு, காஞ்சிபுரம் மண்டல தலைமை பொறியாளருக்கு, கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மே மாதத்திற்குள் பணிகளை துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.- மின்வாரிய அதிகாரிகள்,செங்கல்பட்டு.