படூர் சட்டக்கல்லுாரி மாணவர்கள் திடீர் போராட்டம்
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த படூர் தனியார் சட்டக் கல்லுாரியில் உதவி பேராசிரியராக ஸ்டாலின், 54, என்பவர் பணிபுரிந்து வந்தார்.இவர் நேற்று பகல் 2:00 மணி அளவில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவருக்கு திடீரென மராடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு போக முடியாமல் அவர் உயிரிழந்ததாக தெரிகிறது. இதையடுத்து மாரடைப்பு ஏற்பட்ட பேராசிரியருக்கு முதலுதவி அளிக்க போதிய வசதி இல்லாமல் உயிரிழந்ததாக ஆத்திரமடைந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் 200 க்கும் மேற்பட்டோர் நுழைவாயிலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மற்ற துறை மாணவர்கள், ஊழியர்கள் பணி முடிந்து வீடுகளுக்கு செல்ல முடியாமல் வளாகத்திலேயே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர்.இதற்கிடையில் கல்லூரி நிர்வாகத்தினர், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சில் ஈடுபட்டனர். பின் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.