| ADDED : டிச 08, 2025 07:01 AM
மதுராந்தகம்: நெல்வாய் கூட்டுச்சாலை மதுராந்தகம் மார்க்கத்தில், நிழற்குடையின்றி பயணியர் தவித்து வருகின்றனர். மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்வாய் கிராமம், உத்திரமேரூர் -- புக்கத்துறை மற்றும் மதுராந்தகம் -- உத்திரமேரூர் இடையேயான மாநில நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் அமைந்து உள்ளது. இங்குள்ள நெல்வாய் கூட்டுச்சாலை பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணியர் வசதிக்காக தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக, தகர 'ஷீட்'டுகளால் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. நெல்வாய், கிருஷ்ணாபுரம், குமாரவாடி உள்ளிட்ட கிராம மக்கள் இந்த பேருந்து நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர். ஆனால், இந்த கூட்டுசாலைக்கு சற்று தள்ளி, உத்திரமேரூர் - மதுராந்தகம் மார்க்கத்தில் காத்திருக்கும் பயணியர், நிழற்குடையின்றி வெயிலிலும், மழையிலும் நின்றபடியே காத்திருக்கும் நிலை தொடர்கிறது. எனவே, நெல்வாய் கூட்டுச்சாலையில், மதுராந்தகம் மார்க்கத்தில் நிழற்குடை அமைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். மதுராந்தகம் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இங்கு புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.