கண்காணிப்பு கேமராக்கள் பழுது குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல்
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில், சாலை சந்திப்புகள் மற்றும் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளதால், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அச்சிறுபாக்கம் பேரூராட்சி, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது.இதனால், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளதால் சாலையின் முக்கிய சந்திப்புகள், சாலை வளைவுகள் மற்றும் வணிக வளாகங்கள், பள்ளிகள் உள்ள இடங்களில் காவல் துறை, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் நிதியில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.இதில் அச்சிறுபாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அச்சிறுபாக்கம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தம், எலப்பாக்கம் புறவழிச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் உடைந்து, அவற்றின் 'ஒயர்'கள் அறுந்து, காட்சிப்பொருளாக உள்ளன.இதனால், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிவதில் பின்னடைவு ஏற்படுகிறது.பழுதடைந்தும், உடைந்தும் உள்ள இந்த கேமராக்களை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.