உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சர்வதேச செஸ் போட்டியில் தமிழக இனியன் சாம்பியன்

சர்வதேச செஸ் போட்டியில் தமிழக இனியன் சாம்பியன்

சென்னை, சர்வதேச அளவில் நடந்த, 'டோல் டோல் மாஸ்டர்ஸ் கோப்பை'க்கான போட்டியில், தமிழகத்தின் இனியன் பன்னீர்செல்வம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பும், பிரான்ஸ் செஸ் கூட்டமைப்பும் இணைந்து, இரண்டாவது டோல் மாஸ்டர்ஸ் கோப்பைக்கான செஸ் போட்டியை, ஐரோப்பிய நாடான பிரான்சின், ஐக்ஸ் அன் ப்ரொவென்ஸ் என்ற நகரில், கடந்த 19 முதல் 27ம் தேதி வரை நடத்தின. இதில், 39 கிராண்ட் மாஸ்டர்ஸ், 67 சர்வதேச செஸ் மாஸ்டர்ஸ் உட்பட 43 நாடுகளைச் சார்ந்த 276 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் போட்டியிட்ட தமிழகத்தின் இனியன் பன்னீர் செல்வம், தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஒன்பது சுற்றுகளாக நடந்த போட்டியில், 6 வெற்றி, 3 டிரா என, 7.5 புள்ளிகளுடன் இந்திய வீரர் இனியன் முதல் இடத்தை, போலாந்த் வீரர் மலேக் ஜான் உடன் சமன் செய்தார். போட்டி ரேபிட் சுற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வெற்றியாளரை தீர்மானிக்க நடந்த முதல் ரேபிட் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது ரேபிட் போட்டியில், இனியன் வெற்றி பெற்று, 1.5 - 0.5 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து, தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். மூன்றாவது இடத்தை உக்ரைனின் கிராண்ட் மாஸ்டர்ஸ் பொவேல் இலியானோவ் கைப்பற்றினார். சவாலாக இருந்தது ''இந்த தொடர் எனக்கு சவாலாக இருந்தது. இறுதி சுற்று விறுவிறுப்பாக இருந்தது. இந்த மாதம், இது எனக்கு மூன்றாவது சர்வதேச போட்டி. காலம் எனக்கு அதிக அனுபவங்களை தந்துள்ளது. பட்டத்திற்காகவோ, பதக்கத்திற்காகவோ விளையாடாமல், நமக்காக விளையாடினால் பட்டமும், பதக்கமும் தானாக நம்மை தேடி வரும். தமிழக அரசு, புதிய திட்டங்கள் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறது. தமிழக அரசுக்கும், தமிழக விளையாட்டு துறைக்கும் நன்றி. - இனியன் பன்னீர்செல்வம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை