டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி தமிழக பெண்கள் அணி சாம்பியன்
திருவொற்றியூர், அகில இந்திய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில், மகளிர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் கோப்பை வென்று அசத்தியது. தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, அகில இந்திய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகள், கடந்த மூன்று நாட்கள் நடந்தன. திருவொற்றியூர், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கோவா உட்பட, பல மாநிலங்களில் இருந்து ஆடவர் பிரிவில் 26 அணிகள்; மகளிர் பிரிவில் 16 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதி போட்டிகள், நேற்று மதியம் நடந்தன. ஆடவர் அணியில், மஹாராஷ்டிரா - தமிழக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், முதலில் பேட் செய்த மஹாராஷ்டிரா அணி, 87 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய தமிழக அணி 72 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், மஹாராஷ் டிரா அணி சாம்பியன் பட்டம் வென்றது. தமிழகம், கேரளா அணிகள், முறையே அடுத்தடுத்து இரண்டு, மூன்றாவது இடங்களை பிடித்தன. பெண்கள் பிரிவில், தமிழகம் - கோவா அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில், முதலில் ஆடிய தமிழக மகளிர் அணி 88 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கோவா அணி, 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், தமிழக மகளிர் அணி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. கோவா இரண்டாம் இடமிடமும், ஆந்திரா மூன்றாவது இடமும் பிடித்தன.