உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுங்கச்சாவடிகளில் தற்காலிக பஸ் நிறுத்தங்கள்...உத்தரவு!:பண்டிகை கால நெரிசலை தவிர்க்க நடவடிக்கை

சுங்கச்சாவடிகளில் தற்காலிக பஸ் நிறுத்தங்கள்...உத்தரவு!:பண்டிகை கால நெரிசலை தவிர்க்க நடவடிக்கை

செங்கல்பட்டு::செங்கல்பட்டு மாவட்ட சுங்கச்சாவடி பகுதிகளில், தென்மாவட்ட பயணியர் வசதிக்காக, தற்காலி பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில், அடிப்படை வசதிகள் செய்து தர, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.செங்கல்பட்டு அடுத்த பரனுார், அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் பகுதியில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இதன் வழியாக, அரசு மற்றும் தனியார் வாகனங்கள், தினமும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன.இதுமட்டுமின்றி, விடுமுறை நாட்கள், பொங்கல், தீபாவளி ஆகிய நாட்களில், சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு, வழக்கத்தை விட கூடுதலாக அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.

குற்றச்சாட்டு

இதேபோல், தென்மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்வதற்கு தனி பாதையும், லாரி, கார் செல்வதற்கு தனி பாதையும், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தனி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.பண்டிகை காலங்களில் தென் மாவட்ட பயணியர் சுங்கச்சாவடியில் இருந்து, நேரடியாக தென்மாவட்ட பேருந்துகளை பிடிக்கும் வகையில், கடந்த ஆண்டு சுங்கச்சாவடிகளில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டன.அவற்றில், அப்போது பயணியருக்கு குடிநீர், தற்காலிக கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என, தென் மாவட்ட பயணியர் குற்றம் சாட்டினர்.இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், சட்டம் - ஒழுங்கு ஆய்வு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், சில தினங்களுக்கு முன் நடந்தது.இந்த கூட்டத்தில், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணியருக்கு, சுங்கச்சாவடி பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாதது குறித்தும், இந்த ஆண்டு அவற்றின் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

உறுதியளிப்பு

அப்போது, குடிநீர், தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்படாததால், பெண் பயணியர் கடுமையாக பாதிக்கப்பட்டதாக, போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணியர் வசதிக்காக, சுங்கச்சாவடி பகுதிகளில், தற்காலிக பேருந்து நிறுத்தம், ட்ரோன் கேமரா, குடிநீர், உயர்கோபுர மின் விளக்கு, தற்காலிக கழிப்பறைகள், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.இந்த உத்தரவையடுத்து, சுங்கச்சாவடி பகுதியில், பயணியருக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி உறுதியளித்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பரனுார் சுங்கச்சாவடி பகுதியில், டி.எஸ்.பி., தலைமையில், 84 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதேபோல், ஆத்துார் சுங்கச்சாவடி பகுதியில், 64 போலீசார் ஈடுபடுவர். இதுமட்டுமின்றி, பரனுார், புறவழிச்சாலை, மேம்பாலங்கள், மாமண்டூர் பாலம், சோத்துப்பாக்கம் மேம்பாலம், புக்கத்துறை, படாளம், மேலவலம்பேட்டை, கருங்குழி, அய்யனார் கோவில், அச்சிறுபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதேபோல், கிழக்கு கடற்கரை சாலையிலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.பரனுார், செங்கல்பட்டு புறவழிச்சாலை மேம்பாலம் மற்றும் மாமண்டூர் பாலங்களில், மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. வரும் தீபாவளி பண்டிகைக்காக, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகமாக செல்லும் சூழல் உள்ளது.விபத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மின் விளக்குகள் அனைத்தையும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி