சிறுவங்குணத்தில் ரேஷன் கடை ரூ.9.85 லட்சத்திற்கு டெண்டர்
பவுஞ்சூர்:சிறுவங்குணத்தில் ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக, 9.85 லட்சம் ரூபாயில், புதிய நியாய விலைக்கடை அமைக்க முடிவு செய்யப்பட்டு,'டெண்டர்' விடப்பட்டுள்ளது.பவுஞ்சூர் அருகே சிறுவங்குணம் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்கு செயல்படும் நியாய விலைக் கடையில், 365 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர்.30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழுதடைந்த கட்டடத்தில் நியாய விலைக் கடை செயல்பட்டு வந்ததால், நாளடைவில் கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, மேல் தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து மோசமான நிலையில் இருந்தது.இதனால் மழைக்காலத்தில் மேல் தளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மழைநீரில் நனைந்தன. இவற்றை பாதுகாக்க விற்பனையாளர்கள் சிரமப்பட்டு வந்தனர்.இதனால், புதிய நியாய விலைக் கடை கட்டடம் அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 2025 - 26 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், 9.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய நியாய விலைக் கடை கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது.விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, புதிய நியாய விலைக்கடை கட்டடம் கட்டப்படும் என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.