உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நல்லுார் நத்தத்தனார் நினைவுத்துாண் மாற்ற இடம் தேர்வு செய்வதில் இழுபறி

நல்லுார் நத்தத்தனார் நினைவுத்துாண் மாற்ற இடம் தேர்வு செய்வதில் இழுபறி

செய்யூர்:நல்லுார் நத்தத்தனார் நினைவுத்துாணை மாற்றியமைக்க, இரண்டு ஆண்டுகளாக இடம் தேர்வு செய்யப்படாமல் உள்ளதால், சாலை விரிவாக்கப் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட நல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர், சங்ககாலப் புலவர் நல்லுார் நத்தத்தனார்.இவர், சங்ககால நுால்களில் ஒன்றான பத்துப்பாட்டின் கீழ் வரும் சிறுபாணாற்றுப்படை என்ற நுாலை இயற்றியவர்.இவரது நினைவை போற்றும் விதமாக, கடந்த 1958ம் ஆண்டு நல்லுார் கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது.அதன் பின், 1992ம் ஆண்டு தமிழக அரசு சார்பாக, திருவுருவ சிலை அருகே நினைவுத்துாண் நிறுவப்பட்டது.ஆண்டுதோறும் பாரதிதாசன் பிறந்த நாளான, ஏப்., 29ம் தேதி, தமிழ் வளர்ச்சி துறை சார்பாக, நல்லுார் நத்தத்தனார் நினைவுத்துாண் அருகே, தமிழ் கவிஞர் நாள் கொண்டாடப்படுவது வழக்கம்.இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், சாலையோரத்தில் இடையூறாக உள்ள நல்லுார் நத்தத்தனார் நினைவுத்துாணை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது.கடந்த 2023ம் ஆண்டு, அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தமிழ் கவிஞர் நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபோது, நினைவுத்துாணை மாற்றி அமைப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது.அப்போது, சுற்றுலாப் பயணியரை ஈர்க்கும் வகையில், நல்லுார் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் மாற்று இடம் தேர்வு செய்யக்கோரி, அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.நல்லுார் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் அரசுக்குச் சொந்தமான இடம் இல்லாததால், கடந்த சில மாதங்களுக்கு முன், நல்லுார் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே, 30 சென்ட் இடத்தில், நல்லுார் நத்தத்தனார் நினைவுத்துாண் மற்றும் மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அனுமதி பெற அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால், தற்போது வரை மாற்று இடம் உறுதி செய்யப்படாமல் உள்ளதால், நினைவுத்துாண் உள்ள நல்லுார் பகுதியில், சாலை விரிவாக்கப் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ