உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி கழிவுநீர் கால்வாயில் துாய்மை பணி சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் அவலம்

பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி கழிவுநீர் கால்வாயில் துாய்மை பணி சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் அவலம்

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள், வங்கிகள் உள்ளிட்டவை உள்ளன.சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, தினமும் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு, அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு செல்லும் வழியான அனுமந்தபுரம் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பு, மண்டபத்தெரு சந்திப்புகளில், சாலையில் கழிவு நீர் தேங்கி வழிந்தோடியது.இதன் காரணமாக, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, மக்கள் கழிவு நீரை மிதித்து செல்லும் நிலை இருந்தது. இதனால், அப்பகுதிவாசிகள் மற்றும் பக்தர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வந்தது.இது குறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை ஊராட்சி நிர்வாகம் சார்பில், பணியாளர்கள் கழிவு நீர் கால்வாயில் இறங்கி, கால்வாயில் ஏற்பட்டு இருந்த அடைப்புகள் மற்றும் குப்பையை அகற்றி, கழிவு நீர் செல்ல வழி ஏற்படுத்தினர்.காய்வாயை சுத்தம் செய்த தொழிலாளர்கள் கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட எந்த பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி, வெறும் கைகளால் துாய்மை பணி செய்தனர்.இதைக்கண்ட அப்பகுதிவாசிகள், ஊராட்சி நிர்வாகம் சார்பில், இவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ