உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை மாவட்டத்தில் 100 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி முதல் முறை இலக்கு நிர்ணயித்து விவசாயிகளை தேர்வு செய்யும் பணி துவக்கம்

செங்கை மாவட்டத்தில் 100 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி முதல் முறை இலக்கு நிர்ணயித்து விவசாயிகளை தேர்வு செய்யும் பணி துவக்கம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், முதல் முறையாக நான்கு வட்டாரங்களில், தேசிய வேளாண்மை திட்டத்தின் கீழ், மக்காச்சோளம் சாகுபடி துவக்கப்பட உள்ளது. இதற்காக, விவசாயிகளுக்கு மானியமும் வழங்கப்பட உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம். செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. மாவட்டத்தில், 1.67 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. நெற்பயிர் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, மா, தர்ப்பூசணி போன்ற தோட்டக்கலை பயிர் சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நெல், கரும்பு உள்ளிட்ட வேளாண் பயிர்களின் பாசனத்திற்கு, அதிக நீர் தேவை. தமிழகத்தில் நீர் பற்றாக்குறை அவ்வப்போது ஏற்படுகிறது. இந்த நேரங்களில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர். எனவே, நீர் தேவை குறைவான பயிர்களை சாகுபடி செய்யும்படி மத்திய, மாநில அரசுகள் வாயிலாக, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதற்காக, மாற்று பயிர்கள் சாகுபடி திட்டத்தை, வேளாண் துறை செயல்படுத்தி வருகிறது. மாற்று பயிர்களை பொறுத்தவரை, மக்காச்சோளம் வாயிலாக விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.தற்போது கால்நடைகள், கோழி தீவனம், மதிப்பூட்டப்பட்ட உணவு வகை, எத்தனால் போன்றவற்றுக்கு, மக்காச்சோளம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதனால், மக்காச்சோளம் அதிகமாக தேவைப்படுகிறது. ஆனால், நாட்டில் மக்காச்சோளம் உற்பத்தி மகவும் குறைவாக உள்ளது.மக்காச்சோளத்தின் தேவை மற்றும் விவசாயிகளின் வருவாயை கருத்தில் கொண்டு, சென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், தலா நுாறு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய, தற்போது இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மக்காச்சோள விதைகள், திரவ உயிர் உரங்கள், இயற்கை உரம், 'நானோ யூரியா' உள்ளிட்டவை அடங்கிய, 6,000 ரூபாய் மதிப்பிலான தொகுப்புகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.இதில், 2.5 ஏக்கர் பரப்பளவிற்கு மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியமாக தலா 6,000 ரூபாய் வழங்கப்படும்.இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், பவுஞ்சூர் ஆகிய வட்டாரங்களில், தலா 25 ஏக்கர் என, மொத்தம் 100 ஏக்கரில், முதல் முறையாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட உள்ளது.இதற்காக, விவசாயிகள் தேர்வு செய்யும் பணியில், வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

அக்டோபரில் சாகுபடி துவக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் அதிகமாக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகளை ஊக்குவிக்க, மக்காச்சோளம் சாகுபடி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வரும் அக்டோபர் மாதம், மக்காச்சோளம் சாகுபடி பணி துவக்கப்பட உள்ளது. விவசாயிகளை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.- பா.பிரேம்சாந்திவேளாண்மை இணை இயக்குனர்,செங்கல்பட்டு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை