தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு மறைமலைநகரில் தீராத பிரச்னை
மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சியில், 21 வார்டுகளில் பல்லாயிரக்கணக்கான வீடுகள், 450க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.இங்கு, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 30,000க்கும் மேற்பட்ட மக்கள் தினமும் இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு பணிக்கு வந்து செல்கின்றனர்.இந்த நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலை, தெருக்களில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் ஆயிரக்கணக்கான தெருக்களில் உள்ளன. இதில் தெருவிற்கு 10 தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை வாகன ஓட்டிகள், பாதசாரிகளை துரத்திச் சென்று கடிக்க முற்படும் போது, அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இரவு பணி முடிந்து வருவோர், நாய்களுக்கு பயந்தே மாற்றுப் பாதையில் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.மேலும், நாய்களுக்கு தோல் நோய் மற்றும் வெறி பிடித்து தெருக்களில் சுற்றி வருவதால், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், இதுவரை நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.கருத்தடைமறைமலைநகர் நகராட்சி பகுதியில் உள்ள தெருநாய்களைப் பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கூடம் அமைக்கப்பட உள்ளது. தெருநாய்களை பிடிப்பதற்கென பல்வேறு வழிகாட்டு முறைகள் உள்ளன. இவற்றை பின்பற்றி, விலங்குகள் நல ஆர்வலர்களுடன் இணைந்து நாய்களை பிடிக்கும் பணிகள் துவக்கப்பட உள்ளன.- நகராட்சி அதிகாரி.