நெய்குப்பி ஆஞ்சநேயர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
சதுரங்கப்பட்டினம்,கல்பாக்கம் அடுத்த, நெய்குப்பியில், ஸ்ரீனிவாச பெருமாள், ஆஞ்நேயர் வழிபாடு கருதி, முதலில், ஆஞ்சநேயர், கலிகர், வராகர், நரசிம்மர், கருடர் ஆகிய பஞ்ச முகங்களுடனான ஆஞ்சநேயர் கோவில், கடந்த 2017ல் அமைக்கப்பட்டது. 18 அடி உயர சுதை சிலை, மூலவர் சன்னிதி என அமைத்து, கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது.தற்போது, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், மூலவ மூர்த்தி சன்னிதிகளுக்கு, மூன்றுநிலை விமானம், மகா மண்டபம் என புதிதாக அமைக்கப்பட்டு, ஸ்ரீனிவாச பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 8ம் தேதி, கணபதி பூஜை துவக்கப்பட்டு, நேற்று காலை மூன்றாம் யாகசாலை பூஜை நிறைவுபெற்று, மூலவர் சன்னிதி விமானம், பஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீனிவாச பெருமாள், பரிவார மூர்த்திகள் ஆகியோருக்கு புனித நீரூற்றி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.திருக்கழுக்குன்றம் வடக்குப்பட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹனுமத் சமேத ராகவேந்திரர் கோவிலிலும், மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.l மதுராந்தகம் நகர், கடப்பேரி பகுதியில், மீனாட்சி அம்மாள் உடனுறை திரு வெண்காட்டீஸ்வரர் திருகோவில் அமைந்துள்ளது.இக்கோவில், சில ஆண்டுகளாக பராமரிப்பு இருந்து வந்தது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், விழா குழுவினர் பங்களிப்புடன், கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவுற்ற நிலையில், கோவில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.அதன்படி, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. நேற்று, காலை, நான்காம் கால யாக பூஜை துவங்கி, யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பட்டன.காலை 9:30 மணி முதல் 10:00 மணிக்குள், ராஜ கோபுரம் மற்றும் விமானங்களுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் உடனுறை ஸ்ரீ வெண்காட்டீஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் இரவு 9:00 மணிக்கு பஞ்ச மூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது.