செங்கை -- பெருங்களத்துார் சாலையில் விபத்துகள் அணுகுசாலைகள் ஆக்கிரமிப்பே முக்கிய காரணம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், அதிக விபத்துகள் நடக்கின்றன. இதற்கு, அணுகுசாலைகளில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் முக்கிய காரணமாக உள்ளன. எனவே, ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான, 28 கி.மீ., துாரமுள்ள சாலையில், நாளொன்றுக்கு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன.அணுகு சாலைகள் ஆக்கிரமிப்பு, அதிவேக பயணம், மது அருந்தி, போதையில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட காரணங்களால், இந்த வழித்தடத்தில் சராசரியாக ஒரு நாளில், இரண்டு விபத்துகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, அணுகுசாலைகள் ஆக்கிரமிப்புகள் விபத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது தெரிந்துள்ளது.இதை கணக்கிட்டு, இந்த வழித்தடத்தில் மத்திய, மாநில அரசு சார்பில், 14 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், வாகன விபத்தில் சிக்குவோரை இந்த ஆம்புலன்ஸ்கள் மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க, எப்போதும் தயார் நிலையில் உள்ளன.இதில், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில்,'1033' ஆம்புலன்ஸ் வாகனங்கள், கூடுவாஞ்சேரி மற்றும் பரனுார் சுங்கச்சாவடியில் தலா ஒன்று நிறுத்தப்பட்டு உள்ளன.தவிர, மாநில அரசின் சார்பில் '108' ஆம்புலன்ஸ் வாகனங்கள் பீர்க்கன்காரணை, வண்டலுார், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், பரனுார், செங்கல்பட்டு வித்யாசாகர் ஆகிய இடங்களில் தலா ஒன்று, செங்கல்பட்டில் நான்கு என, மொத்தம் 12 வாகனங்கள் உள்ளன.விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் 108 அல்லது 1033 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கூறினால், அடுத்த சில நிமிடங்களில், சம்பவ இடத்திற்கு வந்து, விபத்தில் சிக்கியோரை ஆம்புலன்ஸ்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றன.இதில், கூடுவாஞ்சேரிக்கு தெற்கே விபத்தில் சிக்குவோரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலும், கூடுவாஞ்சேரிக்கு வடக்கே விபத்தில் சிக்குவோரை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கின்றன.இதில், செங்கல்பட்டு மருத்துவமனை துாரம் அதிகம் என்பதால், சிங்கபெருமாள் கோவில் அருகே, தமிழக அரசு சார்பில், சிறப்பு முதலுதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.விபத்தில் சிக்கியவரின் பாதிப்பிற்கு ஏற்ப, இங்கு முதலுதவி அளிக்கப்படுகிறது.இந்நிலையில், விபத்தில் சிக்கிய நபரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடுவதற்காக, அணுகுசாலையில் தான் பல வாகனங்கள் ஒதுங்கிச் செல்லும்.சில நேரத்தில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட அணுகுசாலையில் பயணிக்கும் சூழல் வரும். ஆனால், செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான, 28 கி.மீ., துாரமுள்ள இந்த வழித்தடத்தில், பெரும்பாலும் அணுகுசாலை முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.இதனால், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு மற்ற வாகனங்கள் வழிவிட முடியாத சூழல், பல நேரங்களில் ஏற்படுகிறது. இதனால், விபத்தில் சிக்குவோரை குறித்த நேரத்திற்குள் மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்க முடியாத சூழல் ஏற்படுகிறது.எனவே, இந்த தடத்தில் அணுகுசாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்ற நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.