பூ மாலை கடைகளால் நெரிசல் வேடிக்கை பார்க்கும் போலீஸ்
தாம்பரம்:தாம்பரத்தில், முடிச்சூர் - ஜி.எஸ்.டி., - வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் வழியாக, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.முடிச்சூர் சாலைக்கு இறங்கும் மேம்பாலத்தின் கீழ் பகுதி, முறையாக பராமரிப்பதில்லை.பழுதடைந்த வாகனங்கள், மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பெரும் பகுதியை ஆக்கிரமித்து, பூ மாலை கடைகள் போடப்பட்டுள்ளன. தவிர, அணுகு சாலையில் பூ மாலையை தொங்கவிட்டுள்ளனர். சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி, பூ மாலை வாங்க வருவோரால் நெரிசல் அதிகரிக்கிறது.பண்டிகை நாட்களில், அணுகு சாலையில் செல்லவே முடியாத அளவிற்கு, வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.சில அடி துாரத்தில் தாம்பரம் போக்குவரத்து காவல் நிலையம் இருந்தும், போலீசார் அந்த பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை.தவிர, அங்குள்ள 'டாஸ்மாக்' கடைக்கு வரும் 'குடி'மகன்களின் மதுக்கூடமாகவே, மேம்பாலத்தின் கீழ் பகுதி மாறிவிட்டது. போக்குவரத்து காவல் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.