கவுன்சிலர்களிடம் சமரச பேச்சு முடிவுக்கு வந்தது போராட்டம்
ஊரப்பாக்கம்,:ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவி மீதான முறைகேடு புகார் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வார்டு கவுன்சிலர்கள் நடத்திய 50 மணிநேர போராட்டம், அதிகாரிகள் பேச்சுக்குப் பின் முடிவுக்கு வந்தது.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவியாக தி.மு.க.,வைச் சேர்ந்த பவானி உள்ளார். இவர், வார்டு கவுன்சிலர்களின் கையெழுத்தை போலியாக இட்டு, கட்டடங்கள் மற்றும் வீட்டு மனைப் பிரிவுகளுக்கு அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது.இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன், மாவட்ட நிர்வாகத்திடம் வார்டு கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.இந்நிலையில், ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வார்டு கவுன்சிலர்கள், கடந்த 17ம் தேதி காலை 11:00 மணி முதல் தொடர்ந்து 40 மணி நேரம், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டும், மாவட்ட நிர்வாகம் இவர்களது போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை.இதனால், நேற்று காலை 8:30 மணி முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த கவுன்சிலர்கள், ஊராட்சி அலுவலகத்தில் பதாகைகளுடன் அமர்ந்தனர்.இதனால், ஊராட்சி அலுவலகத்தில் கூட்டம் சேர்ந்தது.இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, காட்டாங்கொளத்துார் ஒன்றிய பி.டி.ஓ., சசிகலா, மாவட்ட திட்ட உதவி இயக்குனர் விக்னேஷ் ஆகியோர், நேற்று மதியம் 12:05 மணியளவில், ஊரப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் வந்து, கவுன்சிலர்களுடன் பேச்சு நடத்தினர். அதன் பின், வார்டு கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.வார்டு கவுன்சிலர்கள் கூறியதாவது:ஊராட்சி தலைவி பவானியின் முறைகேடுகள் குறித்து, 45 நாட்களுக்குள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், ஊராட்சி வளர்ச்சிப் பணிகள் வேகமாக நடைபெறும். வார்டு கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி அலுவலர், ஊழியர்கள் கூட்டம் நடத்தப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். எனவே, எங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.