திருப்போரூரில் 3,010 ஏக்கர் நிலத்தை அரசிடம் திருப்பி தந்தது உப்பு நிறுவனம்
சென்னை,:செங்கல்பட்டு, திருப்போரூரில் உப்பு உற்பத்திக்கு வாய்ப்பு இல்லாததால், 3,010 ஏக்கர் நிலத்தை அரசிடமே, தமிழக உப்பு நிறுவனம் திரும்ப வழங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில், தமிழக அரசின் உப்பு நிறுவனத்துக்கு, உப்பு தயாரிக்கும் ஆலை உள்ளது. அங்கு, ஆண்டுக்கு சராசரியாக, 1.50 லட்சம் டன் உப்பு தயாரிக்கப்படுகிறது. அவை, 'அரசு' பிராண்டில் ரேஷன் கடைகளிலும், 'நெய்தல்' பிராண்டில் தனியார் அங்காடிகளிலும் விற்கப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கும் விற்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உப்பு உற்பத்தி செய்வதற்காக, 3,010 ஏக்கர் நிலத்தை உப்பு நிறுவனத்திற்கு, 2019ல் தமிழக அரசு வழங்கியது. அங்கு, முதற்கட்டமாக, 500 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது.இதற்காக, திருப்போரூர் அருகில் உள்ள கடலில் இருந்து, கடல் நீரை எடுத்து வந்து, அரசு வழங்கிய நிலத்தில் உப்பு உற்பத்திக்கான பணிகள் துவங்கின. வாய்க்காலில் மழை தண்ணீர் தேங்கியது. உப்பு உற்பத்திக்கு கடல் நீரில், 3 டிகிரி உப்பு தன்மை இருக்க வேண்டும். ஆனால், கடல் நீரை உப்பு உற்பத்தி செய்யும் இடத்திற்கு எடுத்து வரும் போது, 1.50 டிகிரி கீழ் இருந்தது. இந்நிலை, மூன்று ஆண்டுகளாக தொடர்ந்ததால், உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை உருவானது. எனவே, அங்கு உற்பத்திக்கு வாய்ப்பில்லை என்பதை உப்பு நிறுவனம் உறுதி செய்து விட்டது. இதனால், 3,010 ஏக்கர் நிலத்தை, வருவாய் துறையிடம் ஒப்படைத்து விடுவதாக, தமிழக அரசிடம், உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரேஷனில் விற்பனையை அதிகரிக்க முயற்சி
வெளிச்சந்தையுடன் ஒப்பிடும் போது, தமிழக அரசு நிறுவனத்தின் உப்பு விலை குறைவாகவும், தரமானதாகவும் உள்ளது. அதேசமயம், தனியார் நிறுவனங்கள் உப்புக்கு செய்யும் விளம்பரம் போல், அரசு செய்யாததால், மக்களிடம் அரசு உப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அதற்கேற்ப உப்பு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. எனவே, ரேஷன் கடைகள் வாயிலாக உப்பு விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளை நடத்தும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, உப்பை விற்ற பின் பணம் தரும் வகையில், அதிகளவில் கடனுக்கு உப்பு வகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.