திம்மாவரம் நீஞ்சல் மடுவு கால்வாயில் தடுப்பு சுவர் திட்டம் கிடப்பில் இந்தாண்டும் மஹாலட்சுமி நகர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
மறைமலை நகர் :செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் உள்ள நீஞ்சல் மடுவு கால்வாயில், தடுப்புச் சுவர் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டும் திம்மாவரம், மஹாலட்சுமி நகர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்திலுள்ள தென்னேரி ஏரி, 5,345 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி. மழைக்காலங்களில் இந்த ஏரியின் உபரி நீர் மற்றும் தொள்ளாழி, மதுரமங்கலம், தேவேரியம்பாக்கம், கரும்பாக்கம் உள்ளிட்ட, இரு மாவட்டங்களைச் சேர்ந்த 60 ஏரிகளின் உபரி நீர், கால்வாய்கள் வழியாக 25 கி.மீ., பயணித்து செங்கல்பட்டு, திம்மாவரம் தடுப்பணைக்கு வந்து சேரும். அங்கிருந்து, பாலாற்றில் சென்று கலக்கிறது. வடகிழக்கு பருவ மழையின் போது, திம்மாவரம் தடுப்பணையில் அதிக அளவில் தண்ணீர் தேங்குவது வழக்கம். இந்த தண்ணீர், மற்றொரு கால்வாய் வழியாக, செங்கல்பட்டு பொன்விளைந்தகளத்துார் ஏரிக்குச் செல்வது வழக்கம். அந்த நேரத்தில், திம்மாவரம் நீஞ்சல் மடுவு கால்வாயை ஒட்டியுள்ள, திம்மாவரம் ஊராட்சியில் அடங்கிய மஹாலட்சுமி நகர் உட்பட பல்வேறு நகர்களில், வெள்ள நீர் சூழ்ந்து நிற்கும். தாழ்வான பகுதியாக இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில், இடுப்பளவுக்கு இப்பகுதியில் தண்ணீர் தேங்குகிறது. இதனால், இப்பகுதியில் வசிப்போர் தவித்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, பருவ மழைக்காலங்களில் மழை பெய்யத் துவங்கியதும், மாவட்ட நிர்வாகம் படகு உள்ளிட்ட மீட்பு சாதனங்களுடன், இங்கு முகாமிடுவது வாடிக்கை. இதேபோல கடந்தாண்டு பெய்த மழையில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மின் சாதன பொருட்கள், மெத்தைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேதமடைந்தன. இவர்களுக்கு, அரசு வழங்கிய நிவாரண நிதி கூட கிடைக்கவில்லை. மழைக்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படும் இப்பகுதியினர், வெள்ள பாதிப்பை தடுக்க மஹாலட்சுமி நகரில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து, 37 கோடி ரூபாய் மதிப்பில், 800 மீட்டர் நீளம், 20 அடி உயரத்தில் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்க, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர். ஆனால், இந்த திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளதால், இந்த ஆண்டும் மஹாலட்சுமி நகர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த, அரசு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திம்மாவரம் நீஞ்சல் மடுவு பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க, 2011ம் ஆண்டு முதல், ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம், நீஞ்சல் மடுவு தடுப்பணையை பார்வையிட வந்த, ஊரக வளர்ச்சி செயலர் பொன்னையாவிடமும், தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி கோரிக்கை வைத்துள்ளோம். - நீலமேகம், ஊராட்சி மன்ற தலைவர், திம்மாவரம் திம்மாவரம் நீஞ்சல் மடுவு பகுதியில், மஹாலட்சுமி நகரில் இருந்து வடகால் வரை 5 கி.மீ.,க்கு, 2021ம் ஆண்டு துார் வாரப்பட்டது. தடுப்புச் சுவர் அமைக்க கருத்துரு உருவாக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்தவுடன், பணிகள் துவக்கப்படும். பொதுப்பணித் துறை அதிகாரிகள் விவசாயம் பாதிப்பு திம்மாவரம் தடுப்பணை நிரம்பி, பொன்விளைந்தகளத்துார் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் தண்ணீர் செல்லும் முன்பே, மஹாலட்சுமி நகர் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துவிடும். இதனால், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தடுப்பணையை திறந்து விடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளனர். இதன் காரணமாக, பொன்விளைந்தகளத்துார் ஏரி முழுமையாக நிரம்பாமல், அப்பகுதியில் 800 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.