கால்வாயின் இருபுறமும் மண் குவியல் துார்ந்து நீரோட்டம் பாதிக்கும் அபாயம்
செங்கல்பட்டு, துார்வாரிய மண்ணை அப்புறப்படுத்தாமல் மழைநீர் வடிகால்வாயின் இருபுறமும் குவிக்கப்பட்டுள்ளதால், மழைக்காலத்தில் செங்கல்பட்டு பகுதிகளில் மீண்டும் வடிகால்வாய் துார்ந்து, நீரோட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு நகராட்சியில் ஜே.சி.கே., நகர், வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால்வாய்கள் உள்ளன. இவற்றை நகராட்சி நிர்வாகம் சரியாக சீரமைக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், கால்வாய்கள் சீரமைக்கும் பணிக்காக, 60 லட்சம் ரூபாயை, நகராட்சி நிர்வாகம் ஒதுக்கியது. பருவ மழைக்கு முன், கால்வாய்களை துார்வாரி சீரமைக்க, நகராட்சி நிர்வாகத்திற்கு, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து, நகரில் மழைநீர் கால்வாய்களை துார்வாரும் பணிகள், கடந்த சில நாட்களாக நடந்தன. ஆனால், கால்வாயில் துார்வாரிய மண்ணை அப்புறப்படுத்தாமல், மீண்டும் அதே பகுதியில் குவித்து வைத்துள்ளனர். மழை காலங்களில் தண்ணீர் செல்லும்போது, கால்வாய் பகுதியில் குவித்து வைத்துள்ள மண், மீண்டும் கால்வாயில் துார்ந்து விடும். எனவே, இந்த மண்ணை அப்புறப்படுத்த வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.