பரந்துாரில் நிலம் இல்லை ஜி ஸ்கொயர் விளக்கம்
சென்னை : 'காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் எங்களுக்கு எந்த நிலமும் இல்லை' என, 'ஜி ஸ்கொயர்' கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பரந்துார் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு, நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுஉள்ளனர். சில நிறுவனங்களுக்கு ஆதரவாக, இப்பகுதியை அரசு தேர்வு செய்துள்ளதாக, தகவல் பரவியது. இந்நிலையில், 'ஜி ஸ்கொயர்' கட்டுமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளராக, 'ஜி ஸ்கொயர்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எங்களுக்கு பரந்துாரில், பெரிய அளவில் நிலம் இருப்பதாக, சிலர் அரசியல் காரணங்களுக்காக, தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், எங்கள் நிறுவனத்துக்கு எந்த நிலமும் இல்லை. எந்த அரசியல் அமைப்புகளுடனும், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எங்கள் நிறுவனம் தொடர்பாக ஏதாவது தகவல் வந்தால், எங்களிடம் முறையாக உறுதிப்படுத்திய பிறகு வெளியிடவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.