மதுராந்தகம்:வேடந்தாங்கல் சரணாலயத்தில் வலசை வந்துள்ள பறவைகளை, விடுமுறை நாளான நேற்று, சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர். மதுராந்தகம் தாலுகாவில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும், அக்., முதல் ஏப்., வரையிலான காலத்தில், வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. வேடந்தாங்கல் சரணாலயத்தில் ஏரியில் காணப்படும் நீர்க்கரம்பை மரங்களின் உச்சியில், வெளிநாட்டு பறவைகள் தங்கி செல்கின்றன. கடந்த ஆண்டு கணக்கெடுப்பு நிலவரப்படி, 20 வகையை சேர்ந்த, 23,000 பறவைகள் இங்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், வெளிநாட்டு பறவைகளை பார்க்க, மக்கள் அதிகம் வந்து செல்கின்றனர். இதன்படி, 2024ல், 1.30 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். இங்கு பார்வையாளர்கள் வரிசையில் காத்திருந்து, பணம் செலுத்தி நுழைவுச்சீட்டு பெறுகின்றனர். வார விடுமுறை நாட்களில், அதிக மக்கள் வரும்போது, நுழைவுச் சீட்டு பெற, நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாக கியூ.ஆர்., குறியீட்டை ஸ்கேன் செய்து, தேவையான டிக்கெட்களை பெறும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதில், வரும் இணைப்பை பயன்படுத்தி, கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெற்று கொள்ளலாம்.வேடந்தாங்கலில் இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. புத்தாண்டு முதல் இந்த வசதி பயன்பாட்டுக்கு வரும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, பர்மா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில், பல மாநிலங்களில் இருந்து நத்தைகொத்தி நாரை, பாம்பு தாரா, சாம்பல் நாரை, நீர்க்காகம், புள்ளிமூக்கு வாத்து, கூழைக்கடா, கரண்டி வாயன், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகைகளில், 25.000த்திற்கும் மேற்பட்ட பறவைகள் வலசை வந்து தங்கியுள்ளன. நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து பறவைகளின் வரத்து அதிகரித்து உள்ளது. வர்ணநாரை பறவையினம், வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு அனைத்து பறவைகளும் வந்த பின் தாமதமாக வரும். பின், சீசன் முடிந்து, சரணாலயத்திலிருந்து அனைத்து பறவைகளும் சென்ற பின் ஏப்ரல், மே மாதங்களில் தங்கள் திரும்பச் செல்லும். தற்போது 18 பறவைகள் முதற்கட்டமாக வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வந்துள்ளன. நேற்று, கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் பள்ளி அரையாண்டு விடுமுறையை யொட்டி குழந்தைகளுடன், ஏராளமான சுற்றுலா பயணியர் வேடந்தாங்கல் சரணாலயம் வந்து பறவைகளை கண்டு ரசித்தனர். மாமல்லபுரத்தில், கிறிஸ்துமஸ் விடுமுறையில், பயணியர் குவிந்து, சுற்றுலா களைகட்டியது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியினர், வார இறுதி, அரசு விடுமுறை நாட்களில், மாமல்லபுரத்திற்கு படையெடுத்து, பல்லவர் கால சிற்பங்களை கண்டு ரசிப்பர். பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து, நேற்று முன்தினம் முதல் விடுமுறையாக உள்ளது. நேற்று, கிறிஸ்துமஸ் பண்டிகையாகவும் அமைந்த நிலையில், பயணியர் குவிந்தனர். கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜூனன் தபசு, பிற குடவரைகள் பகுதிகளில், தனியாக, குடும்பமாக, குழுவாக என, பயணியர் அலைமோதினர்.