வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் செய்யூரில் பயிற்சி வகுப்பு
செய்யூர்:செய்யூரில் நேற்று, 263 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, இரண்டு பிரிவுகளாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பயிற்சி வகுப்பு நடந்தது. தமிழகத்தில் வரும், 2026ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ள, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். அதன்படி, செய்யூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பயிற்சி வகுப்பு, காலை மற்றும் மாலை என இரண்டு பிரிவுகளாக நடந்தது. இந்த பயிற்சி வகுப்பில், அனைத்து வாக்காளர்களுக்கும், அந்தந்த பி.எல்.ஓ.,க்கள் வீடு தேடிச்சென்று, தீவிர திருத்தத்துக்கான படிவம் வழங்க வேண்டும். வாக்காளர்கள் அந்த படிவத்தில் கையெழுத்திட்டு, தேர்தல் கமிஷன் குறிப்பிடும், 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில், வாக்காளர் வரைவு பட்டியல் தயாரிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு, இதற்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில், செய்யூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 263 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பை, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா ஆய்வு செய்து, கணக்கெடுப்பு படிவம் வழங்குதல் மற்றும் திரும்பப் பெறுதல் குறித்து விளக்கம் அளித்தார்.