உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீடுகளை அகற்ற முயன்ற அதிகாரிகளை சுற்றிவளைத்து வறுத்தெடுத்த பழங்குடியினர்

வீடுகளை அகற்ற முயன்ற அதிகாரிகளை சுற்றிவளைத்து வறுத்தெடுத்த பழங்குடியினர்

ஊனமாஞ்சேரி:ஊனமாஞ்சேரியில் நேற்று, பழங்குடியின மக்களின் வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகள், கடும் எதிர்ப்பால் திரும்பிச் சென்றனர்.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊனமாஞ்சேரி ஊராட்சியில், இருளர் சமூகத்தைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பழங்குடியினர், வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.இவர்கள், நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியுள்ளதாகவும், அந்த வீடுகளை அகற்றி, நகர்ப்புற வாழ்விட குடியிருப்பில் வீடு வழங்க உள்ளதாகவும், நேற்று காலை செய்தி பரவியது.இது குறித்து தகவல் அறிந்ததும், ஊராட்சி தலைவர் மகேந்திரன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட பழங்குடியினர், ஊனமாஞ்சேரி, சோழன் தெருவில் திரண்டனர்.மதியம் 12:30 மணியளவில், இவர்களிடம் கருத்து கேட்க வருவாய்த்துறை மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் வந்தனர்.அப்போது, பழங்குடியின மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால், அதிகாரிகள் புறப்பட்டனர்.அதன் பின், இவர்கள் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் சென்று, அங்கு அமைச்சர் அன்பரசன் மற்றும் கலெக்டரிடம் இது தொடர்பாக புகார் மனு வழங்கினர்.இதுகுறித்து, ஊராட்சி தலைவர் மகேந்திரன் கூறியதாவது:ஊனமாஞ்சேரி ஊராட்சியின் பூர்வீக குடிகளாக உள்ள பழங்குடி இருளர் சமூகத்தினர், கி.பி.15ம் நுாற்றாண்டில், கிருஷ்ணதேவராயர் காலத்தில், இங்கு குடியேறியவர்கள்.80 இருளர் சமூகத்தினர் உட்பட 200 பழங்குடியினர், பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகின்றனர்.மறைந்த முதல்வர்களான எம்.ஜி.ஆர்., மற்றும் கருணாநிதி ஆகியோர் ஆட்சிக் காலத்தில், இவர்களில் 25 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இவர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார், மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.இவர்களில் ஒருவர் வீடும் நீர்நிலை புறம்போக்கில் இடம் பெறவில்லை. ஊனமாஞ்சேரியில், பிரபல தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் கால் பதிக்க உள்ளது. அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவே, இந்த வீடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி