பயன்பாட்டிற்கு வந்தது திரிசூலம்-2 கல்குட்டை குடிநீர் திட்டம் நாள்தோறும் 15 லட்சம் லிட்டர் சுத்திகரிப்பு செய்து வினியோகம்
பல்லாவரம்:தாம்பரம் மாநகராட்சியில், ஐந்து மண்டலங்கள் உள்ளன. இதில், தாம்பரம் பகுதிக்கு, பாலாறு படுகையில் இருந்து குடிநீர் கொண்டுவரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ வாயிலாக குடிநீர் பெறப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில், உள்ளூர் ஆதாரம் வாயிலாக சுத்திகரிப்பு செய்து வழங்குகின்றனர்.மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் உள்ள, 14 வார்டுகளில், மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்குகின்றனர். மெட்ரோ நிர்வாகத்திடம் இருந்து, 70 லட்சம் லிட்டர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து, 30 லட்சம் லிட்டர் என, நாள்தோறும், ஒரு கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.மற்றொரு புறம், மெட்ரோ மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக பெறப்படும் குடிநீர் கோடையில் குறைவதால், குடிநீர் பிரச்னை அதிகரித்து, மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.இதற்கு தீர்வாக, பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் தொடர் முயற்சியால், கல்குட்டை தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, மக்களுக்கு வினியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் ஏற்கனவே, பல்லாவரத்தை ஒட்டியுள்ள, மூவரசம்பேட்டை கல்குட்டையில் இருந்து, நாள்தோறும் 15 லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்து, கச்சேரி மலை தொட்டியில் நிரப்பி, 17வது வார்டுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அதேபோல், திரிசூலம்-1 கல்குட்டையில், 10 லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்து வினியோகம் செய்கின்றனர்.அடுத்ததாக, திரிசூலம்-2 கல்குட்டையில் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி முடிந்து, சோதனை ஓட்டம் நடந்து வந்தது. தற்போது, அந்த திட்டமும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இருந்து நாள்தோறும், 15 லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்து குளத்துமேடு, பாரதி நகர், ஈஸ்வரி நகர் தொட்டிகளில் நிரப்பி, 15, 16வது வார்டுகள் மற்றும் 21வது வார்டின் ஒரு பகுதிக்கு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்படுகிறது.