கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்க வலியுறுத்தல்
சித்தாமூர், ஜூலை 21-பழுதடைந்துள்ள கீழ்வசலை கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.சித்தாமூர் அடுத்த கீழ்வசலை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு, வருமானம், ஜாதி உள்ளிட்ட சான்றிதழ்களையும், அரசின் நலத்திட உதவிகளுக்கு தேவையான சான்றிதழ்களையும் பெற்று வருகின்றனர்.கிராம நிர்வாக அலுவலக கட்டடம் பராமரிப்பு இல்லாமல் நாளடைவில் பழுதடைந்தது. கடந்த 2016ல், 50,000 ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது.தற்போது, கட்டடம் மீண்டும் பழுதடைந்து உள்ளது. தளத்தில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து மழை காலங்களில் மழைநீர் கசிவதால் கிராம வருவாய் கணக்கு பதிவேடுகளை பாதுகாப்பாக பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.