மதுராந்தகம்:செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரை, புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்க வேண்டும் என, பொது மக்கள் எழுப்பி வந்த தொடர் கோரிக்கை இப்போது வலுத்து வருகிறது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் முதல் செங்கல்பட்டு வரையில், 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வசிப்போர், வணிகம், வேலை, தொழில், கல்வி, மருத்துவம் தொடர்பாக செங்கல்பட்டு மற்றும் சென்னையின் பல பகுதிகளுக்கு சென்று வர, புறநகர் ரயில் சேவை இல்லை.எனவே, திண்டிவனம் - செங்கல்பட்டு இடையே, புறநகர் மின்சார ரயில் சேவைகளை துவக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலுவாக கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.இது குறித்து ரயில் பயணி இளையரசு என்பவர் கூறியதாவது:திண்டிவனம் முதல் செங்கல்பட்டு வரையிலான 68 கி.மீ., தூரத்தில், ஒலக்கூர், அச்சிறுபாக்கம், மேல்மருவத்தூர், மதுராந்தகம், படாளம், ஒத்திவாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் உள்ளன.விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ஒரேயொரு பயணியர் ரயில் மட்டுமே காலை, மாலை வேளையில், இந்த ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.இந்த ஒரு ரயிலை நம்பி, 1000க்கும் மேற்பட்டோர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.இந்த ரயிலை தவறவிட்ட பயணியர், மாற்று ரயில் இல்லாததால், அதிக கட்டணத்தில், பேருந்தில் பயணம் செய்யும் வரும் சூழல் உள்ளது.எனவே, செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு புறநகர் மின்சார ரயிலை இயக்கினால், போக்குவரத்து எளிதாகி, பல்லாயிரம்பேர் தினமும் சென்னை வந்து செல்ல வழி பிறக்கும்.இதனால், வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்பு, வணிகம், வியாபாரம் அதிகரிப்பதோடு, மக்கள் பரவலும், சென்னையிலிருந்து திண்டிவனம் வரை அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.