உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை மாவட்ட கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விமரிசை

செங்கை மாவட்ட கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விமரிசை

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலில், காலை 3:30 மணிக்கு நடை திறந்து, மூலவர் ஸ்தலசயன பெருமாள் மார்கழி மாத உற்சவம் கண்டார்.தொடர்ந்து, மகாமண்டபத்தில் உற்சவர் உலகுய்யநின்ற நாயனார், தேவியருடன் எழுந்தருளி, வழிபாட்டைத் தொடர்ந்து, 5:15 மணிக்கு, தற்காலிக சொர்க்கவாசலை கடந்தார்.பின்னர், வீதியுலா சென்றார். பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.திருவிடந்தையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், கார்த்திகை தீபத்தின் போது மூலவருக்கு சாற்றப்பட்ட தைல காப்பு, வைகுண்ட ஏகாதசி நாளான நேற்று அகற்றப்பட்டு, மார்கழி மாத வழிபாடு கண்டார். உற்சவர் ரங்கநாதர் தேவியருடன் எழுந்தருளி, 6:00 மணிக்கு, சொர்க்க வாசல் கடந்து, வீதியுலா சென்றார். கல்பாக்கம், வெங்கடேச பெருமாள், வெங்கடகிருஷ்ண பெருமாள், சதுரங்கப்பட்டினம், மலைமண்டல பெருமாள், மெய்யூர், ஆதிகேசவ பெருமாள், வெங்கப்பாக்கம் ரங்கநாத பெருமாள், புலிக்குன்றம் லட்சுமிநாராயண பெருமாள் உள்ளிட்ட கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற்றது.சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், பழமையான பல்லவர் கால பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது.நேற்று, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4:15 மணிக்கு, வைகுண்ட வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.மூலவர் பூ அங்கி சேவையில் எழுந்தருளினார். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரகலாத வரதர் வஜ்ரங்கி சேவையில் வைகுண்ட வாசல் வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவிலில் உள்ள மகாவிஷ்ணு சன்னதியில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றன.அதே போன்று சீனிவாசபுரம், கே.கே.நகர், நந்திவரம், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி