காஞ்சிபுரம், மொளச்சூர் கிராமத்தில், பட்டா மாற்றம் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சமாக பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, காஞ்சிபுரம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்குட்பட்ட மொளச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர், தந்தையின் பெயரில் உள்ள பட்டாவை, தன் பெயருக்கு மாற்றம் செய்ய, கிராம நிர்வாக அலுவலரிடம் 2015ல் விண்ணப்பித்திருந்தார். பட்டா மாற்றம் செய்ய, கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன் என்பவர், முருகனிடம் 5,000 ரூபாய் லஞ்சமாக கேட்டிருந்தார். லஞ்சமாக பணம் ஏதும் கொடுக்க விரும்பாத முருகன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் 2015 மார்ச் 16ம் தேதி, புகார் அளித்தார். அதன்படி, லஞ்ச பணம் 5,000 ரூபாய் பணத்தை, முருகனிடம் இருந்து, கிராம நிர்வாக அலுவலர் கேட்டு பெற்றுக்கொண்டபோது, போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வழக்கு, காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன் குற்றவாளி என, நீதிபதி அறிவுநிதி,நேற்று உத்தரவிட்டார். இரு வேறு பிரிவுகளின் கீழ், தலா, 4 ஆண்டுகள் சிறை தண்டனையை, ஏககாலத்தில் அனுபவிக்கவும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. அபராத தொகையை பாஸ்கரன் செலுத்திய நிலையில், வேலுார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.