வடிகால்வாய் அமைப்பதில் தரக்குறைவு புதுப்பட்டு கிராம மக்கள் குற்றச்சாட்டு
மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்டு புதுப்பட்டு ஊராட்சி உள்ளது. சாத்தமை, பில்லாஞ்சிகுப்பம், பசும்பூர், குன்னவாக்கம் உள்ளிட்ட குக்கிரமங்கள் உள்ளன.இதில், மதுராந்தகத்திலிருந்து நெல்வாய் வழியாக உத்திரமேரூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.இந்த சாலை ஓரம், புதுப்பட்டு பயணியர் நிழற்குடை எதிரே, 15வது நிதிக் குழுவில் இருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 98 மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த ராமநாதன், 42, கூறியதாவது:புதுப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மழை நீர் கால்வாய் அமைக்க வேண்டிய பகுதிகள் அதிகம் உள்ளன. ஆனால், நெடுஞ்சாலை ஓரம், மழை நீர் வடிகால்வாய் அமைத்து வருகின்றனர்.தரமற்ற முறையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து, புதுப்பட்டு ஊராட்சி தலைவர் சாந்தி கூறியதாவது:புதுப்பட்டு மேட்டு தெரு பகுதியில் இருந்து வரும் மழைநீர், நெடுஞ்சாலை ஓரம் உள்ள புதுப்பட்டு ஏரிக்கு செல்லும் கால்வாயில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.மழைக்காலங்களில் கால்வாயில் இருந்து அதிகமாக வெளியேறும் மழை நீர், மதுராந்தகம் - உத்திரமேரூர் நெடுஞ்சாலையில் செல்வதால், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தீர்மானத்தின் அடிப்படையிலேயே, மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.