ஏரி தண்ணீரில் பதுங்கிய திருடர்களை ட்ரோன் விட்டு பிடித்த கிராமத்தினர்
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம், செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. 62.சலவை தொழிலாளியான இவர், நேற்று வீட்டை பூட்டிக் கொண்டு, சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு கிளம்பியுள்ளார்.அப்போது, அவரது இளைய மகன் சூர்யா, 25, என்பவரிடம் தகவல் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.அண்டவாக்கம் பகுதியில் உழவு பணிக்கு டிராக்டர் ஓட்டச் சென்ற சூர்யா, பணி முடிந்து வேடவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு டிராக்டரில் வந்துள்ளார்.அதே நேரத்தில் மர்ம நபர்கள் இருவர், ஏற்கனவே அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருட முயன்றுள்ளனர். டிராக்டர் வரும் சத்தம் கேட்டதால், மர்ம நபர்கள் இருவரும் வீட்டின் பின்பக்க கதவை திறந்து ஓடி, அங்கிருந்த ஏரியில் பதுங்கி உள்ளனர்.இதை கவனித்த சூர்யா, வேடவாக்கத்தில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ள தன் நண்பருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.உடனே அவர், 'ட்ரோன் கேமரா'வுடன் அங்கு வர, ஏரி பகுதியில் ட்ரோன் கேமராவை பறக்க விட்டுள்ளனர்.தகவல் அறிந்து வந்த அப்பகுதி இளைஞர்களும், ஏரியை சுற்றி வளைத்துள்ளனர்.பின், ஏரி தண்ணீரில் பதுங்கி இருந்த திருடர்கள் இருவரையும், ட்ரோன் வாயிலாக கண்டறிந்த இளைஞர்கள், நீச்சலடித்துச் சென்று அவர்களை பிடித்துள்ளனர்.பின், இதுகுறித்து மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருடர்களை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.முதற்கட்ட விசாரணையில் அவர்கள், சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்,23, மற்றும் ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன், 20, என தெரிந்தது.இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரிக்கின்றனர்.