பம்மல் பிரதான சாலையில் கழிவுகள் கொட்டி நாசம்
பம்மல், தாம்பரம் மாநகராட்சி, ஒன்றாவது மண்டலம், பம்மல், எம்.ஜி.ஆர்., பிரதான சாலையில், தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.அதிக போக்குவரத்து கொண்ட இச்சாலையில், நாகல்கேணி, பெரியார் நகர், பல்லாவரம் மார்க்கெட் பகுதிகளில் இருந்து இறைச்சி கடைக்காரர்கள், இரவு நேரத்தில் கழிவுகளை மூட்டை மூட்டையாக கட்டி, இங்கு போட்டுவிட்டு செல்கின்றனர்.இவர்களுக்கு போட்டியாக, தோல் கழிவுகளும் கொட்டப்படுகின்றன. மற்றொரு புறம், கட்டட இடிபாடுகளை, சாலையின் ஓரத்தில் லோடு லோடாக கொட்டியுள்ளனர்.இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் சூழல் அதிகரித்துள்ளது.அதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அதிக துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். அவ்வழியாக செல்லும் மாநகராட்சி அதிகாரிகள், அரசியல் தலையீடு காரணமாக கண்டுகொள்வதில்லை.இச்சாலையில், குப்பை, இறைச்சி கழிவு கொட்டக்கூடாது என, மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைத்தும், அதை மதிக்காத மர்ம நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.