செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், புறக்காவல் நிலையம் அமைக்கும் பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பிரசவம், சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு உள்நோயாளிகளை பார்க்க வருபவர்கள் மற்றும் புறநோயாளிகள் தாங்கள் கொண்டுவரும் இருசக்கர வாகனங்களை, மருத்துவமனை வளாகத்தில், ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இந்த வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். இதனால், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுமட்டும் இன்றி, அவரச சிகிச்சை பகுதியில், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுடன், குடிபோதையில் வருபவர்கள், டாக்டர் மற்றும் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அவசர சிகிச்சை பகுதியில், ஒரு அறையில் புறக்காவல் நிலையத்தில், ஒரு போலீஸ்காரர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். இவர், மருத்துவமனையில் சாலை விபத்து, தற்கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு சேருவோர் பற்றி, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் உடனுக்குடன் தகவல் அளித்து வருகிறார். மருத்துவமனை வளாகத்தில் உள்ள வார்டுகளில் டாக்டர்கள், ஊழியர்கள் மொபைல் போன், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். இதுபோன்ற சம்பவங் களை தவிர்க்க, ஒரு சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் ஐந்து போலீசாருடன் கூடிய புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, மருத்துவமனை நிர்வாகம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், மாவட்ட எஸ்.பி., யிடம் மனு அளித்தது. இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே, டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் நலன் கருதி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.