சித்தேரி நீரை பெரிய ஏரிக்கு குழாய் வைத்து மாற்றுவது ஏன்?
மாமல்லபுரம்மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் பகுதியில், பொதுப்பணித் துறையின் கீழ் பெரிய ஏரி மற்றும் சித்தேரி ஆகிய ஏரிகள், அருகருகில் உள்ளன.வடகிழக்கு பருவமழை காலத்தில், அவற்றில் மழைநீர் நிரம்பும். இப்பகுதி விவசாய கிணறுகள் நிரம்புவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இப்பகுதியினர், 300 ஏக்கருக்கும் மேல் ஏரி, கிணற்று நீரில் விவசாயம் செய்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன், இரண்டு ஏரிகளிலும் மழைநீர் நிரம்பியது. தற்போது விவசாயிகள் நெல் பயிரிட்டு, பாசனம் செய்து வருகின்றனர். இச்சூழலில் தனியார் சிலர், டிராக்டர் இயந்திரம் இயக்கி, சித்தேரியில் நிரம்பியுள்ள நீரை, குழாய் வாயிலாக பெரிய ஏரிக்கு கொண்டு செல்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:குழிப்பாந்தண்டலம் சித்தேரியில் உள்ள நீரை, தனியார் சிலர் பெரிய ஏரியில் விடுகின்றனர். ஏரியில் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளதா என்றும் தெரியவில்லை. அவ்வாறு மண் எடுப்பதாக இருந்தாலும், ஏரியில் தண்ணீர் வற்றிய பிறகு தானே எடுக்க முடியும்? எதற்காக தண்ணீரை பெரிய ஏரிக்கு மாற்றுகின்றனர் எனத் தெரியவில்லை. அதிகாரிகள் பதில் கூற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.