உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்படுமா?

செய்யூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்படுமா?

செய்யூர்:செய்யூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.செய்யூர் பஜார் வீதியில், அரசு பொது மருத்துவமனை உள்ளது. புத்துார், தண்ணீர்பந்தல், சித்தாற்காடு, அம்மனுார், கீழச்சேரி என, 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான அரசு மருத்துவமனையாக உள்ளது.புறநோயாளிகள், மகப்பேறு மற்றும் அவசர சிகிச்சை என, தினசரி நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சூணாம்பேடு, கடப்பாக்கம், கூவத்துார், சித்தாமூர், பவுஞ்சூர் போன்ற பகுதிகளில் ஏராளமானோர், சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.செய்யூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் டயாலிசிஸ் மையம் இல்லாததால், சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்காக, 30 முதல் 50 கி.மீ., தொலைவில் உள்ள புதுச்சேரி, செங்கல்பட்டு, மேல்மருவத்துார் போன்ற பகுதிகளில் செயல்படும் தனியார் டயாலிசிஸ் மையங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால், பொதுமக்களுக்கு நேர விரயம் மற்றும் பண விரயம் ஏற்படுகிறது.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் செய்யூர் மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து சிறுநீரக பிரச்னை உள்ள நோயாளி ஒருவர் கூறியதாவது:கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறேன்.செய்யூர் பகுதியில் டயாலிசிஸ் மையம் இல்லாததால், 50 கி.மீ., தொலைவில், புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறேன்.வாரம் 3 முறை சிகிச்சைக்கு செல்ல வேண்டி உள்ளது. ஒரு முறை சிகிச்சைக்கு 2,000 முதல் 3,000 ஆயிரம் செலவாகிறது.செய்யூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை மையம் துவங்கினால், ஏராளமான ஏழை எளிய மக்கள் பயனடைவர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ