உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் - செங்கை தடத்தில் கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?

திருப்போரூர் - செங்கை தடத்தில் கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?

திருப்போரூர் : திருப்போரூர் - செங்கல்பட்டு இடையே, மடையத்துார், செம்பாக்கம், கொட்டமேடு, வெங்கூர், வளர்குன்றம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இச்சாலை பயண வசதிக்கு ஏற்ப, 13 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ரயில் தடத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வழியாக, அரசு, மாநகர மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதே தடம் வழியாக வந்து, அச்சரவாக்கம் உள்ளிட்ட மற்ற தடங்களுக்கும் பேருந்துகள் பிரிந்து செல்கின்றன. மேற்கண்ட தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் வாயிலாக, இப்பகுதிவாசிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் சென்று வருகின்றனர்.எனினும், காலை, மாலை பள்ளி நேரங்களில், குறைவான அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறைவாக இயக்கப்படும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் நீடிப்பதால், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், இத்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள், அடிக்கடி மாற்றுத்தடங்களில் விடப்படுவதாகவும், இதனால், பயணியர் கடுமையாக சிரமப்படுவதாகவும் கூறுகின்றனர். பேருந்து நிறுத்தத்திலும் முறையாக பேருந்து நின்று செல்வதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில், திருப்போரூர்- - செங்கல்பட்டு சாலையில், கூடுதல் பேருந்துகள் இயக்குவது உட்பட மேற்கண்ட கோரிக்கைகளுக்கு, மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !