உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லபுரம் நடுநிலைப் பள்ளி பெண்கள் உயர்நிலை பள்ளியாகுமா?

மாமல்லபுரம் நடுநிலைப் பள்ளி பெண்கள் உயர்நிலை பள்ளியாகுமா?

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் நுாற்றாண்டு விழா கொண்டாடப்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மாமல்லபுரத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்குகிறது. கடந்த 1910ல் தொடக்கப் பள்ளியாக துவக்கப்பட்டது. பின்னர், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 1973ல் அரசு உயர்நிலைப்பள்ளி துவக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் தொடக்கப் பள்ளியாக இயங்கியது. 2008ல் மீண்டும் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.இதற்கிடையே, அரசு உயர்நிலைப்பள்ளி, கடந்த 2002ல் அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, பூஞ்சேரி பகுதியில் தனியாக இயங்குகிறது. மாமல்லபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எடையூர் ஊராட்சி கொக்கிலமேடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில், எட்டாம் வகுப்பு பயின்றவர்கள் உயர்நிலை, தொடர்ந்து மேல்நிலை வகுப்பு என பயில, பூஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்கின்றனர்.இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல சிரமப்படுகின்றனர். கூட்ட நெரிசலுடன் செல்லும் அரசுப் பேருந்தில் காலை, மாலை நேரத்தில் அவர்களை ஏற்றாமல் புறக்கணிப்பது உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். மாணவியர் பாதுகாப்பு கருதி, மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால், மாமல்லபுரம் மட்டுமின்றி கொக்கிலமேடு பள்ளி மாணவியரும் பயனடைவர்.மாமல்லபுரம் நடுநிலைப் பள்ளியின் நுாற்றாண்டு விழா, பிப்., 2ம் தேதி கொண்டாடப்பட உள்ள சூழலில், இப்பள்ளியை பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென, பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சென்னை அணுமின் நிலையம், ஆறு வகுப்பறைகளுடன், தற்போது புதிய கட்டடம் கட்டியுள்ளது. மேலும் வகுப்பறை கட்டடம் கட்டவும் தயாராக உள்ளதால், அரசு நடவடிக்கை எடுக்க, பலதரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ