உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுதலாக செலுத்திய சொத்து வரி தொகை திரும்ப...கிடைக்குமா?:செங்கை ஊராட்சிகளின் வீடு உரிமையாளர்கள் குழப்பம்

கூடுதலாக செலுத்திய சொத்து வரி தொகை திரும்ப...கிடைக்குமா?:செங்கை ஊராட்சிகளின் வீடு உரிமையாளர்கள் குழப்பம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த இரு மாதங்களுக்கு முன், ஊராட்சிகளில் திடீரென சொத்து வரி உயர்த்தப்பட்டது.இந்நிலையில், இதில் திடீர் 'பல்டி' அடித்து, பழையபடி வரி வசூலிக்க, ஊராட்சி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால், உயர்த்தப்பட்ட புதிய கட்டணத்தை செலுத்தியோருக்கு, கூடுதலாக கட்டிய தொகை திருப்பி தரப்படுமா என, குழப்பம் ஏற்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம் மாநகராட்சி தவிர, செங்கல்பட்டு, மறைமலை நகர், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி, மதுராந்தகம் ஆகிய நான்கு நகராட்சிகள் உள்ளன.இது தவிர அச்சிறுபாக்கம், இடைக்கழிநாடு, கருங்குழி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் என, ஆறு பேரூராட்சிகள் உள்ளன.அத்துடன் காட்டாங்கொளத்துார், திருப்போரூர், லத்துார், சித்தாமூர், திருக்கழுக்குன்றம், பரங்கிமலை, மதுராந்தகம், அச்சிறுபாக்கம் ஆகிய எட்டு ஒன்றியங்களின் கீழ், 359 ஊராட்சிகள் உள்ளன.இந்த 359 ஊராட்சிகளில், வீடுகளுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை, அந்தந்த ஊராட்சி தலைவர், செயலர் தோராயமாக கணக்கிட்டு வசூலித்து வந்தனர்.இந்த நடைமுறையால், வேண்டப்பட்டவர்களின் வீடுகளுக்கு குறைவாகவும், நெருங்கிய உறவினர்கள் வீட்டிற்கு வரியே வசூலிக்காமலும், பல ஊராட்சி தலைவர்கள் செயல்பட்டு வந்தனர்.இதனால், அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டது. தவிர, நிலையான வரி வருவாயை கணக்கிடுவதில் சிக்கல் இருந்து வந்தது.மேலும், ஊராட்சிகளின் அடிப்படை கட்டுமானங்களுக்கு, பெரிய அளவில் நிதி ஒதுக்கும் நிர்பந்தம் அரசுக்கு எழுந்தது.இதற்கு தீர்வாக, ஊராட்சிகளின் வருவாயை அதிகரிக்க, அனைத்து வீடுகளுக்கும் கட்டாய வரி நிர்ணயம் செய்யப்பட்டது. அத்துடன்,'ஆன்லைன்' வாயிலாக பதிவேற்றம் செய்து, ஊராட்சி செயலர்கள் வரி வசூலித்து வந்தனர்.அதன்படி கூரை வீடு, ஓட்டு வீடு, கான்கிரீட் வீடு என பிரிக்கப்பட்டு, சதுர அடிக்கு முறையே 40 பைசா, 60 பைசா, 1 ரூபாய் என வரி நிர்ணயம் செய்யப்பட்டது.இந்த நடைமுறையிலும் வேண்டப்பட்டவர்கள், உறவினர்கள் என கணக்கிட்டு, பல முறைகேடுகள் நடந்தன. வீட்டின் பரப்பு குறைவாக கணக்கிடப்பட்டு, வரி வசூலிக்கப்பட்டது.அதன்படி, ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் 44 ரூபாய், அதிகபட்சமாக 220 ரூபாய் என்றே, வரி வசூலிக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த ஏப்ரலில், அனைத்து ஊராட்சிகளின் வருவாயை அதிகரிக்க, சொத்து வரி விதிப்பில் புதிய மாற்றத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.அதன்படி ஊராட்சி செயலர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் வாயிலாக, ஊராட்சிகளில் உள்ள குடிசை வீடு, ஓட்டு வீடு, கான்கிரீட் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வீடுகள் எத்தனை சதுர அடியில் கட்டப்பட்டுள்ளன என்ற விபரங்களும் கணினியில் சேகரிக்கப்பட்டன.இதற்காக, கடந்த ஏப்ரல் மாதம், ஊராட்சி நிர்வாகங்கள் வரி வசூலிப்பில் ஈடுபடவில்லை. பின், புதிதாக கணக்கிடப்பட்ட சதுர அடி பரப்பிற்கு ஏற்ப, வீடுகளுக்கு புதிய வரி விதிக்கப்பட்டது. இதனால், 200 ரூபாய் வரி செலுத்திய நபர், 600 ரூபாய் செலுத்தும் நிலை உருவானது.இரு மடங்கு, மூன்று மடங்கு வரை சொத்து வரி உயர்ந்ததால், மக்களிடையே கடும் எதிர்ப்பு அலை கிளம்பியது.இந்நிலையில், இந்த புதிய வரி விதிப்பு முறை, எதிர்வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டு வங்கியை பாதிக்கும் என்ற தகவல், அரசுக்குச் சென்றது.இதையடுத்து, மீண்டும் பழைய நடைமுறைப்படி வரி வசூலிக்க, ஊராட்சிகளுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதனால், உயர்த்தப்பட்ட புதிய கட்டணத்தை செலுத்தியோருக்கு, கூடுதலாக கட்டிய தொகை திருப்பி தரப்படுமா என, குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, வரி செலுத்தியோர் கூறியதாவது:புதிய நடைமுறையின்படி, இரு மடங்கு கட்டணத்தை ஒரே தவணையாக, கடந்த மே மாதம் செலுத்தி உள்ளோம். தற்போது, பழைய நடைமுறைப்படியே சொத்து வரி வசூலிக்கப்படும் என்கின்றனர். அப்படியானால், இரு மடங்காக செலுத்திய கட்டணத்தில், ஒரு பங்கு கட்டணத்தை திருப்பித் தரும்படி கேட்டால், அந்த கட்டணம் அடுத்தாண்டு வரியில் கழித்துக் கொள்ளப்படும் என்கின்றனர். இது ஏற்புடையதாக இல்லை. இதனால், அந்த தொகை கிடைக்குமா கிடைக்காதா என, குழப்பம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, ஊராட்சி செயலர் கூறியதாவது:ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு, சதுர அடி பரப்பில் சொத்து வரி வசூலிக்கும்படி, அரசு அறிவித்திருந்தது. இந்த புதிய வரியால், 400 ரூபாய் முதல் 5500 ரூபாய் வரை, கட்டண தொகை உயர்ந்தது.இதையடுத்து, இந்த வரியை இரு தவணையாக செலுத்தலாம் என சலுகை அளிக்கப்பட்டது. சிலர், ஒரே தவணையில் கட்டி முடித்தனர்.இந்நிலையில், 10 நாட்களுக்கு முன், பழைய முறையிலேயே வரி வசூலிக்க வேண்டும். புதிய முறை வேண்டாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இது, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஓட்டு வங்கி பாதிக்கும்

ஊராட்சி ஒன்றிய அதிகாரி கூறியதாவது:மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டு, மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.இந்நிலையில், ஊராட்சியிலும் புதிய வரி விதித்தால், கிராம மக்களிடத்திலும் ஆளும் அரசின் மீது அதிருப்தி ஏற்படும். இது, 2026 சட்டசபை தேர்தலில் ஓட்டு வங்கியை பெருமளவு பாதிக்கும்.இந்த தகவல் உளவுத் துறை வாயிலாக, ஆளும் கட்சி தலைமைக்குச் சென்றதால், பழைய முறையிலேயே சொத்து வரி வசூலிக்கப்படும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.புதிய வரிவிதிப்பின்படி அதிக கட்டணம் செலுத்தியவர்களுக்கு, அடுத்த ஆண்டுக்கான வரி கட்டணத்தில், மீதமுள்ள தொகை கழித்துக் கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !