மழைநீர் கால்வாய்கள் துார்வாரப்படுமா?
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள, மழைநீர் கால்வாய்கள் துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திலிருந்து, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் வரை, ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும், சில ஆண்டுகளுக்கு முன், மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய்களை முறையாக துார்வாரி பராமரிக்காததால், புதிய பேருந்து நிலையம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில், கழிவுநீருடன் மழைநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து பெய்துவரும் மழைக்கு, கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண, மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.