தி.நகர் - மாமல்லை மாநகர் பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
மாமல்லபுரம்: மாமல்லபுரம் - சென்னை தியாகராயநகர் இடையே, மாநகர் பஸ் இயக்க, பயணியர் வலியுறுத்துகின்றனர்.சென்னையை ஒட்டியுள்ள முக்கிய சுற்றுலா இடமாக மாமல்லபுரம் விளங்குகிறது. சென்னை பகுதியினர், பல்லவ சிற்பங்கள் காண, இங்கு சுற்றுலா வருகின்றனர். மாமல்லபுரம் மற்றும் சுற்றுபுற பகுதியினர், சென்னை தி. நகருக்கு பொருட்கள் வாங்க செல்கின்றனர். பயணியர் போக்குவரத்து வசதி கருதி, மாமல்லபுரத்திற்கு, தடம் எண் 599 முன் இயக்கப்பட்டது.அப்பகுதியில் இருந்தும் மற்றும் மாமல்லபுரத்தில் இருந்தும், 45 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயங்கி, பயணியருக்கு பெரிதும் பயன்பட்டது. நாளடைவில் இத்தட பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது திருவான்மியூர் வரை மட்டுமே, தடம் எண் 588 மாநகர் பஸ் இயக்கப்படுகிறது. மாமல்லபுரம் பகுதியினர், திருவான்மியூர் சென்று, அங்கு வேறு பஸ்சிற்கு காத்திருந்து சிரமப்படுகின்றனர். கூடுதல் கட்டணம், நேரவிரயம் ஏற்படுகிறது. எனவே, நிறுத்தப்பட்ட தி. நகர் பஸ்சை, மீண்டும் இயக்க வலியுறுத்துகின்றனர்.