எல்லையம்மன் கோவிலில் சமுதாய நலக்கூடம் அமையுமா?
செய்யூர்:செய்யூர் அருகே, எல்லையம்மன் கோவில் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யூர் அருகே முதலியார்குப்பம், நயினார்குப்பம், ஓதியூர் உள்ளிட்ட பகுதிகளில், சமுதாய நலக்கூடம் வசதி இல்லை. இதனால், இப்பகுதிகளில் வசிப்போர் தங்களது குடும்பங்களின் சுப நிகழ்ச்சிகளான நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்த நாள் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த மண்டபம் தேடி கடப்பாக்கம், செய்யூர் போன்ற பகுதிகளுக்கு அலைய வேண்டியுள்ளது. அத்துடன், தனியார் மண்டபத்தில் வாடகையாக அதிக பணம் கேட்பதால், ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேருராட்சி பகுதியில், எல்லையம்மன் கோவில் பகுதி உள்ளது. இது, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரதான பேருந்து நிறுத்தங்களில் ஒன்றாக உள்ளதால், அதிகமானோர் கூடும் இடமாகவும் உள்ளது. போக்குவரத்து வசதி உள்ள இடமாக எல்லையம்மன் கோவில் பகுதி உள்ளதால், இங்கு சமுதாய நலக்கூடம் அமைத்தால், அனைத்து தரப்பினருக்கும் வசதியாக இருக்கும். அத்துடன், பேரூராட்சிக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். எனவே, எல்லையம்மன் கோவில் பகுதியில் சமூதாய நலக்கூடம் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.