செங்கை புறவழிச்சாலையில் நிழற்குடை அமைக்கப்படுமா?
செங்கல்பட்டு, - செங்கல்பட்டு புறவழிச்சாலையில், மேம்பாலம் அருகில், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்கின்றன.சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. புறவழிச் சாலையில், பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன. ஆனால், சாலையின் இருபுறமும் நிழற்குடை இல்லாததால், வெயில், மழையில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுமட்டும் இன்றி, இரவு நேரங்களில், பெண்கள் அச்சத்துடன் நீண்டநேரம் பேருந்திற்காக, காத்திருந்து பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனை தவிர்க்க, பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.ஆனால், பயணியர் நிழற்குடை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, பயணியர் நலன்கருதி, நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.