செங்கை - வாலாஜாபாத் சாலையில் மின் விளக்கு அமைக்கும் பணி
செங்கல்பட்டு:செங்கல்பட்டு - வாலாஜாபாத் வரையிலான நெடுஞ்சாலையில் மின் விளக்கு, நிழற்குடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை குறுகியதாக உள்ளதால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது. சாலையை விரிவாக்கம் செய்து, மேம்படுத்துவது அவசியம் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையை 448 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த, 2018ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. செங்கல்பட்டில் இருந்து வாலாஜாபாத் அடுத்த, வெண்குடி கிராமம் வரை, நான்கு வழி சாலையாக மேம்படுத்தும் பணி துவங்கி, நடந்து வருகிறது. வெண்குடி முதல் காஞ்சிபுரம் வரை, 13 கி.மீ., தொலைவுக்கு இரு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. வெண்குடி - காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு - வாலாஜாபாத் வரை சாலை பணி முடிந்துள்ளது. தற்போது, பயணியர் நிழற்குடை மற்றும் மின் விளக்கு அமைக்கும் நடந்து வருகிறது. ஆக., இறுதிக்குள் பணி முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.